தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், பல பிரச்சனைகளுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் சூர்யா வக்கீலாக இருக்கிறார். இவர் தென்னாட்டு பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தையாக சத்யராஜ், தாயாக சரண்யா நடித்திருக்கிறார். சூர்யா தன் தாய், தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இன்னொரு பக்கம் வடநாட்டு பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக வினய் இருக்கிறார். இதனிடையே தென்னாடு, வடநாடு ஊர்களுக்கு இடையே சில ஆண்டுகளாக ப்ரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊரில் சில பெண்களை கொலை மற்றும் தற்கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கான காரணத்தை கண்டு பிடிக்க சூர்யா தீவிரம் காட்டுகிறார்.
கடைசியில் இதன் பின்னணியில் இருப்பது வினய் தான் என்பது சூரியாவிற்கு தெரிய வருகிறது. இறுதியில் வினய் பெண்களை கொலை செய்ய காரணம்? வினய்க்கு, சூர்யா தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? பெண்கள் காப்பாற்றப்பட்டாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், படத்தில் சூர்யா கண்ணபிரான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கம் போல் சூர்யாவின் காமெடி, நடனம், ரொமான்ஸ், சென்டிமென்ட், சண்டை என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
குறிப்பாக சண்டைக்காட்சிகளில் சூர்யா பயங்கர ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பின் நாயகியாக வரும் பிரியங்கா தன்னுடைய அழகான நடிப்பு மூலம் ரசிகர்களை மீண்டும் கவர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் கதாப்பாத்திரம் ஜாலியாக சென்றாலும் பிற்பாதியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. மேலும், ஸ்டைலிஷ் வில்லனாக வினய் நடித்து அசத்தி இருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத இவருடைய நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
பாசமான தாய், தந்தையாக சரண்யா பொன்வண்ணன், சத்தியராஜ் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் படத்தில் தேவதர்ஷினி, சூரி, புகழ் ஆகியோர் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு நடக்கும் பாலியல் மிரட்டல்களை மையமாக வைத்து இயக்குனர் பாண்டிராஜ் படத்தை இயக்கி இருக்கிறார். ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும்? பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்? என்ற கருத்தை படத்தில் அழகாக காண்பித்திருப்பது பாராட்டுக்கு உரிய வகையில் உள்ளது.
மேலும், ரசிகர்கள் மட்டுமில்லாமல் குடும்பங்களும் ரசிக்கும்படியாக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். ரத்னவேலுவின் ஒளிப்பதிவு அருமையாக வந்திருக்கிறது. அதோடு படத்தில் குக் வித் கோமாளி புகழ் சில காட்சிகளில் வந்தாலும் பயங்கரமாக சிரிக்க வைத்திருக்கிறார். மண் மணம் மாறாத கதைக்களத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தில் முதல் பாதி பொறுமையாக போனாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் காட்டி இருக்கிறார்.
ப்ளஸ்:
படத்தில் சூர்யா உடைய நடிப்பு வேற லெவல் தெறிக்க விட்டது என்று சொல்லலாம்.
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
கதைக்களம், திரைக்கதை கொண்டு சென்ற விதமும் அருமையாக உள்ளது.
சமுதாயத்திற்கு முக்கியமான பதிவை இயக்குனர் சொல்லி இருப்பது பாராட்டக்கூறிய ஒன்று.
படத்திற்கு இசையும் ஒளிப்பதிவும் பக்க பலமாக அமைந்துள்ளது.
மைனஸ்:
முதல் பகுதி கொஞ்சம் பொறுமையாக சென்றது.
சில இடங்களில் காமெடி ஒர்கவுட் ஆகவில்லை.
மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய குறைகள் எதுவும் இல்லை.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை எதற்கும் துணிந்தவன் பூர்த்தி செய்தது என்று சொல்லலாம். ரசிகர்கள் மட்டுமில்லாமல் குடும்பங்கள் என அனைவரும் கொண்டாடும் பக்கா கமர்சியல் படமாக எதற்கும் துணிந்தவன் உள்ளது.
மொத்தத்தில் எதற்கும் துணிந்தவன் – துணிச்சலான வெற்றி