ஒன்னில்ல ரெண்டில்ல மொத்தம் 96,000 கேஸ் – யார் இந்த ‘ஜெய் பீம் ‘ சந்துரு. மனதை நெகிழ வைக்கும் அவரின் முழு பின்னணி.

0
1545
jaibhim
- Advertisement -

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஜெய்பீம். இந்த படம் பழங்குடியினர் பெண்ணுக்கு நீதி வழங்கும் கதையை மையமாக வைத்த கதை. படத்தில் நியாயம் பெற்றுத்தரும் சந்துரு என்ற வழக்கறிஞராக சூர்யா நடித்து இருக்கிறார். நிஜ வாழ்கையில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை தான் அப்படியே சூர்யா நடித்து இருந்தார். நீதிபதி சந்துரு அவர்களை பற்றி தெரியாத பல விஷயங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம். 1993 ஆம் ஆண்டில் கடலூர் முதனை கிராமத்தில் நிகழ்ந்த ராஜகண்ணு கொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. பல தரப்பில் இருந்து வந்த மிரட்டல்களையும் பிரச்சினைகளையும் கடந்து இந்த வழக்கில் ராஜகண்ணு குடும்பத்திற்கு சந்துரு அவர்கள் நீதி வாங்கித் தந்திருந்தார்.

-விளம்பரம்-

சந்துரு அவர்கள் 30 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி இருந்தார். அப்போது இவர் பல பொதுநல வழக்குகள், மனித உரிமை வழக்குகள், பெண்கள் உரிமை வழக்குகள் என பல வழக்குகளை திறமையாக வாதாடி வெற்றியும் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் சமூக தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு இவர் முன்னுரிமை கொடுத்து போராடியிருக்கிறார். மேலும், இவர் வழக்கறிஞராக இருந்த போது மனித உரிமைகள் தொடர்பான வழக்குக்கு எந்த ஒரு கட்டணமும் வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய சந்துரு அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 2006 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

பின் இவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். இவர் நீதிபதியாக 2001, 2004 ஆம் ஆண்டு விண்ணப்பித்த போதெல்லாம் இவர் தீவிரவாதிகளின் வக்கீல் என்று சொல்லி தமிழக முதல்வர் ஜெயலலிதா இவருக்கு நீதிபதி பதவியை தர மறுத்து விட்டார். அதற்குப் பின் தான் வழக்கறிஞர் என்பது தொழில். இதில் யாரும் யாருக்காக வாதாடலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இவருக்கு 2006 ஆம் ஆண்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் நீதிபதியான உடனே இவர் செய்த முதல் செயல் தன்னுடைய சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

இதுவரை இவர் நீதிபதியாக பணிபுரிந்த போது 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒரு நாளைக்கு 75 வழக்குகளுக்கு மேல் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலேயே இந்த மாதிரி எந்த நீதிபதியும் இவ்வளவு வழக்குக்குத் தீர்ப்பு வழங்கியது கிடையாது. மேலும், இவருடைய நீதி வழங்கும் திறமையைப் பார்த்து ஆந்திராவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் ‘நீதிமன்றங்களின் சச்சின் சந்துரு தான், அவரது ஸ்கோரை முறியடிக்க முடியாது’ என்று கூறியுள்ளார். அதுமட்டும் இன்றி இவர் உயர்நீதிமன்றத்தின் சம்பிரதாயங்களையும், மரபுகளையும் தகர்த்தெரிந்தவர். இவர் நீதிமன்றத்தில் உள்நுழையும் போது, வெளியில் செல்லும்போதும் தனக்கு பணிவிடை செய்வதற்காக இருந்த ஊழியரை தேவையில்லை என்று நிறுத்திவிட்டார்.

-விளம்பரம்-

பின் தனது பாதுகாப்பாக சப்-இன்ஸ்பெக்டர் மட்டுமில்லாமல் ஒரு கான்ஸ்டபிள் கூட வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார். நீதிமன்றத்தில் தன்னை ‘மை லார்ட்’ என அழைக்க கூடாது என்று வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டார். அதோடு ஒரு முறை வழக்கறிஞர் இவரை நீதியரசர் என்று அழைத்தபோது அந்த வார்த்தை தனி நபர் துதி, அதை பயன்படுத்தக்கூடாது என்றும் நீதியரசர் என்கிற வார்த்தையை விட நீதி நியாயம் என்று அழைக்கப்படுவதை தான் அவர் விரும்பினார். இது தவிர இவர் மேடை நாடகங்களுக்கு போலீஸ் இடம் அனுமதி பெற தேவையில்லை, பஞ்சமி நிலங்களை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நியாயமாக வேலை செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும், கோவில்களில் பெண்கள் பூஜை செய்வதற்கு எந்த தடையும் விதிக்கக்கூடாது, மாட்டிறைச்சி கடைகள் நடத்த தடை விதிக்கக் கூடாது என்று மக்களுக்கு பல வகையில் இடையூறாக இருந்த வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கினார்.

வழக்கமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் போது ஐந்து நட்சத்திர ஓட்டலில் பணி நிறைவு பாராட்டு விழா நடத்துவார்கள். ஆனால், இதை நீதிபதி சந்துரு அவர்கள் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். மேலும், ஓய்வுக்குப் பின்னர் நீதி துறை சம்பந்தமான பொறுப்புகளை பெற மாட்டேன். அதற்கு பதிலாக இவர் சமுதாயப் பணி செய்வதையே விரும்புவதாக தெரிவித்திருந்தார். இவர் ஓய்வு பெறும் போது தன்னுடைய சொத்து கணக்கு விவரங்களையும் வெளிப்படையாக அறிவித்திருந்தார். மேலும், இவருக்கு ஓய்வு பெறும் போது சொகுசு காரை ஒப்படைத்தார்கள். ஆனால், அது எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மின்சார ரயிலில் சென்றார். இப்படி நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பல நல்ல விஷயங்களை செய்த உன்னத மனிதர். ஒரு உண்மையான குடிமகனாகவே வாழ்ந்து காட்டியவர் சந்துரு. சொல்லப்போனால் இன்றைய அம்பேத்கார் என்று கூட இவரை சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய செயல்கள் வானளவுக்கு உயர்ந்து உள்ளது.

Advertisement