சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் தன்னுடைய தந்தையின் இரும்புத் தொழிலில் வேலை செய்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூவின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் யாஷ் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இது ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. முதல் பாகம் இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல் முதன் முறையாக ஒரு கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்றால் “கே ஜி எப்” என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும், இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே யாரும் எதிர்பாராத வகையில் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது. இதனால் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் விரைவாக ஆரம்பிக்கப்பட்டது. பின் 3 ஆண்டுகள் கழித்து கே ஜி எஃப் 2 படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
கேஜிஎப் 2 படம் பற்றிய தகவல்:
இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் கேஜிஎப் 2 படம் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஸ்கிரீன்களில் உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் 19 வயதான உஜ்வல் குல்கர்னி என்பவர் தான் எடிட்டிங் செய்தார் என்ற செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. மேலும், கேஜிஎப் படத்தின் 1 மற்றும் 2 ஆகிய இரண்டிலுமே படத்தில் தன் இசை மூலம் கூடுதலாக பிரமிப்பை ஏற்படுத்தி உச்சத்திற்கு கொண்டு சென்றவர் ரவி பஸ்ரூர். இந்நிலையில் இவரை பற்றி தெரியாத சில விஷயங்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.
ரவி பஸ்ரூர் செய்த தொழில்:
ரவி பஸ்ரூர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இரும்பு தொழில் செய்து வந்தார். பின்னர் தன் உழைப்பால் இசையமைப்பாளராக மாறினார் என்று சொன்னால் பலரும் நம்ப முடியாத ஒன்று. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திலுள்ள குண்டாபுரா தாலுக்காவிலுள்ள ஒரு கிராமத்தில் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர் ரவி பஸ்ரூர். இவர் ஆரம்பத்தில் தன் தந்தையின் தொழிலான பட்டறையில் சிற்பங்கள் செய்வது உள்ளிட்ட இரும்பு தொழில் வேலை செய்துகொண்டிருந்தார். இருந்தாலும் பின்னணி இசை அமைப்பாளராக ஆக வேண்டும் என்ற கனவை விடாமல் துரத்திக்கொண்டு போராடினார் ரவி பஸ்ரூர். தற்போது பிரம்மிக்க வைக்கும் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
ரவி பஸ்ரூர் திரைப்பயணம்:
இவரை திரை உலகிற்கு கொண்டு வந்தவர் கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் தான். இவருடைய முதல் படமான உக்ரம் மூலம் தான் ரவி பஸ்ரூரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அதை தொடர்ந்து பல படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். இருந்தாலும் இவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது கேஜிஎப் 1 படம் தான். அதன் பிறகு பாலிவுட்டில் சல்மான் கான் படம் வரை ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். இப்படி சினிமாவின் உச்சத்தில் ரவி பஸ்ரூர் திகழ்ந்து கொண்டிருந்தாலும் தன்னுடைய தந்தையின் இரும்பு பட்டறையில் வேலை செய்யும் வீடியோ தற்போது அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ லாக்டவுன் நேரத்தில் எடுக்கப்பட்டது. அதாவது கேஜிஎப் 2 படம் வெளியாவதற்கு முன்னரே இந்த வீடியோ வெளிவந்திருந்தது.
இரும்பு தொழிலில் ரவி பஸ்ரூர் சம்பாதித்தது:
அதில் 35 ரூபாய் சம்பளத்திற்காக தன்னுடைய தந்தைக்கு இரும்பு பட்டறையில் உதவியாக இருந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் பணம் கிடைத்தவுடன் தன் தந்தை மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், இதுகுறித்து இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூர் கூறியிருப்பது, கடவுள் நம் பழைய நினைவுகளை மறுபரிசீலனை செய்ய உதவுகிறார். நாம் அவருடைய கை பாவைகள் என்று கூறி இருக்கிறார். இப்படி ரவி பஸ்ரூர் பகிர்ந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ரவிக்கு வாழ்த்துக்களை மட்டுமில்லாமல் வீடியோவை பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.