ஜெய் பீம் படக்குழுவினர் மீது போடப்பட்ட வழக்கிற்கு உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் அதிரடி உத்தரவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ஜெய் பீம்.
இந்த படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம். மேலும், படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார்.
ஜெய்பீம் படம்:
பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதேசமயம் இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள்.
ஜெய்பீம் படம் செய்த சாதனை:
இருந்தாலும், திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது. மேலும் ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தது. ஆஸ்கரின் யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்த முதல் தமிழ் திரைப்படம் ஜெய்பீம் என்பது குறிபிடத்தக்கது. இப்படி பல சாதனைகளை செய்த ஜெய்பீம் படம் மீது முருகேசன் தொடர்ந்து இருக்கும் வழக்கு தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக இருக்கிறது.
ஜெய்பீம் படம் மீது வழக்கு:
அதாவது, ஜெய் பீம் படத்தில் குறவர் சமுதாயத்தை இழிவு படுத்தி தவறாக சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் படத்தை தயாரித்த நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறவர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் அவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்திருந்தார். மேலும், அவர் தான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். ஆனால், அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிபதி உத்தரவு:
பின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகேசன் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யா மீதும் இயக்குனர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்திருப்பதால் இருவரையும் எதிர் மனுதாரர்களாக இணைக்கும் படி உத்தரவிட்டிருந்தார். இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இரண்டு வாரங்களில் சென்னை காவல் துறைக்கு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கினை வேறொரு தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.