“INDIA என்ற பெயரை கேட்டாலே பாஜக அரசு அலறுகிறது” தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

0
634
- Advertisement -

தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள முதலமைச்சர் என்ற பொறுப்பின் அடிப்படையிலும், உடன்பிறப்புகளாம் நீங்கள் அளித்த கழகத் தலைவர் என்ற பொறுப்பினை சுமந்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகப் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, மக்கள் காட்டிய அன்பையும் கழகத்தினர் அளித்த வரவேற்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறேன். முதலமைச்சர் என்ற முறையில் டெல்டா மாவட்டங்களுக்கு அடிக்கடி சென்று வந்திருந்தாலும், இந்த முறை 4 நாட்கள் தொடர்ச்சியான பயணம் என்றபோது, சொந்த ஊருக்குச் செல்லும் குழந்தையின் குதூகல மனநிலையுடன்தான் புறப்பட்டேன்.

-விளம்பரம்-

நமது திராவிட மாடல் அரசு அறிவித்த திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிசெய்து கொள்ளும் ஆய்வுப் பணிகள், திருமண நிகழ்வுகள், ஆதீனகர்த்தருடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்றதைச் செய்திகள் வாயிலாகப் பலரும் அறிந்திருப்பீர்கள். இந்தப் பயணத்தில் மிக முக்கியமான நிகழ்வு என்பது, அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட’ விரிவாக்கமாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாளில் மதுரையில் இதனைத் தொடங்கி வைத்தேன்.

- Advertisement -

அதனைத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து, 30 ஆயிரம் பள்ளிகளில் 17 இலட்சம் மாணவ – மாணவியர் பயன்பெறும் வகையில் ஆகஸ்ட் 25-ஆம் நாள் மாநிலம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தன்னிகரற்ற தலைவர் கலைஞர் தன் தோளிலும் நெஞ்சிலும் அரைநூற்றாண்டு காலம் சுமந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை நான் சுமக்கத் தொடங்கி இன்றுடன் (ஆகஸ்ட் 28) ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. 94 வயதில் 80 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கை எனும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டவர் தலைவர் கலைஞர். பன்முக ஆற்றல் கொண்ட நிர்வாகி – படைப்பாளர். அவருடைய பேராற்றல் எனக்கு இல்லை.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை 2018-ஆம் ஆண்டு இயற்கை நம்மிடமிருந்து பிரித்தபோது, இயக்கத்தைக் காக்கும் பெரும் பொறுப்பை உங்கள் அனைவரின் ஆதரவுடன் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் என் மீது சுமத்தினார். கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையுடன் நானும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையான கூட்டணியை உருவாக்கினோம். அது வெறும் தேர்தல் நேரக் கூட்டணி அல்ல. கொள்கை உணர்வுமிக்க கூட்டணி. ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் பன்முகத்தன்மை மீதும், மதச்சார்பின்மை கொள்கை மீதும் நம்பிக்கையும் உறுதியும் கொண்ட கூட்டணி.

-விளம்பரம்-

நாடாளுமன்றத் தேர்தலில் அந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் பெற்ற மகத்தான வெற்றி என்பது இந்திய அளவிலான அரசியல் இயக்கங்களுக்கு ஒரு ஃபார்முலாவாக ஆனது. மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கொள்கைக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அதற்கு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஓயாத உழைப்பும் – ஒற்றுமையான செயல்பாடும் முக்கியமான காரணமாகும்.

அதன் விளைவாக, தி.மு.க.வுக்குத் தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பலத்தை தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள். அந்த வகையில்தான் 2019-ஆம் ஆண்டு அமைந்த கொள்கைக் கூட்டணி அடுத்தடுத்த தேர்தல்களிலும் உறுதியாகத் தொடர்வதுடன், ஒவ்வொரு தேர்தல் களத்திலும் வெற்றியும் தொடர்ந்து வருகிறது. ஒன்றிய ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டால்தான், நமது மாநிலத்திற்குரிய நிதி ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கும். முழுமையான வெளிச்சம் பரவும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மதவாத இருட்டை விரட்டும் விடியல் தேவைப்படுகின்ற காலம் இது. அதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பா.ஜ.க அரசு அலறக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது. உண்மையான இந்தியா நம் பக்கம்தான் இருக்கிறது.

அந்த இந்தியாதான் இந்தியாவுக்கு விடியலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திகழும். உங்கள் ஆதரவுடன் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, உங்களில் ஒருவனான நான் ஆயத்தமாக இருக்கிறேன். காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம்

Advertisement