சமீபத்தில் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா. ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. தற்போது இவருக்கு 39 வயது தான் ஆகிறது. இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.
தற்போது இவர் நான்கு படங்களில் நடித்து வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு இந்தப் படங்களின் ஷூட்டிங் தொடர இருந்தது. இந்நிலையில் இவர் உயிரிழந்தார். இவரின் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்தது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. நடிகை மேக்னாவும், சிரஞ்சீவி சார்ஜாவும் 10 வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நடிகை மேக்னா அவர்கள் தனது கணவர் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறியது, நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்ததை வார்த்தைகளாக சொல்ல மீண்டும் மீண்டும் முயல்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை என்னால் விவரிக்க முடியாது. என் நண்பர், என் காதலர், என் கூட்டாளி, என் குழந்தை, என் நம்பிக்கைக்குரியவர், என் கணவர் – இதெல்லாவற்றையும் விட மேலானவர் நீங்கள். நீங்கள் என் உயிரின் ஒரு பகுதி. ஒவ்வொரு முறையும் நான் வாசல் கதவைப் பார்த்து நீங்கள் வரமாட்டீர்களா என்று ஏங்குகிறேன். நீங்கள் உள்ளே நுழைந்து நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொல்வதைப் பார்க்க முடியாத போது ஒரு வலி என் ஆன்மாவைத் தாக்குகிறது.
ஒவ்வொரு நிமிடமும் உங்களைத் தொட முடியாதது என்று நினைக்கும் போது என் இதயம் பிளக்கிறது. இதயத்தில் எல்லாம் மூழ்கும் மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஆனால், உடனே நீங்கள் என்னருகில் இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. நான் சோர்வடையும் போதெல்லாம் நீங்கள் என்னைக் காக்கும் தேவதையாக என்னைச் சுற்றி இருக்கிறீர்கள். நம் காதலின் சின்னமாக நீங்கள் எனக்குத் தந்த விலை மதிக்க முடியாத பரிசு தான் நம் குழந்தை. அந்த இனிய அற்புதத்துக்கு நான் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பேன். உங்களை நம் குழந்தை வடிவில் மீண்டும் இந்த பூமிக்குக் கொண்டு வரும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். நீங்கள் என்னுள் இருக்கிறீர்கள். ஐ லவ் யூ என்று நெஞ்சை உலுக்கும் அளவுக்கு பதிவிட்டு உள்ளார்.