'பராசக்தி' டைட்டில் விவகாரம் தான் தற்போது மீண்டும் திரையுலகில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் SK 25 என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 'Dawn Pictures and Red Gaint Movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்கு 'பராசக்தி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
ஏவிஎம் நிறுவனம்:
சூழல் இப்படி இருக்க, விஜய் ஆண்டனி தற்போது அவரது 25வது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு அவர் தமிழில் 'சக்தித் திருமகன்' என்றும், தெலுங்கில் 'பராசக்தி' என்றும் பெயர் சுட்டப்பட்டு இருக்கிறது என்றும், இந்தப் பெயரை தான் முன்னரே பதிவு செய்து விட்டதாக விஜய் ஆண்டனி சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் நேரில் சந்தித்து சமரசம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே, ஏவிஎம் நிறுவனம் 'பராசக்தி' என்கிற பெயரை சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு கொடுத்துவிட்டதாக அறிவித்திருந்தது.

நேஷனல் பிக்சர்ஸ்:
ஆனால், தற்போது கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'பராசக்தி' படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில், ' கிருஷ்ணன்- பஞ்சு இயக்கத்தில் கருணாநிதியின் வசனத்தில் சிவாஜி அறிமுகமான கடந்த 1952 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பராசக்தி' இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் பெருமாள் முதலியார் தான் தயாரித்தார். ஏவிஎம் நிறுவனம் சில ஏரியாக்களில் விநியோக உரிமையை தான் வாங்கியது. மேலும், அந்தப் படத்தில் சிவாஜியை கதாநாயகனாக நடிக்க வைக்க ஏ வி மெய்யப்ப செட்டியார் ஆட்சேபேனை தெரிவித்தார்.
சிவாஜியை நடிக்க வைத்தது:
ஆனால், நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் தான் பிடிவாதமாக சிவாஜியை ஹீரோவாக வேண்டும் என்று சொல்லில் நடிக்க வைத்தார். அதற்காக தன்னுடைய இறுதி காலம் வரை சிவாஜி, ஒவ்வொரு பொங்கல் அன்றும் வேலூர் வந்து பெருமாளிடம் ஆசிபெற்று செல்வார். அப்படி எங்கள் தாத்தாவின் பெருமைமிக்க தயாரிப்புதான் பராசக்தி. பொன்விழா, வைர விழா கண்டிருக்கும் இப்படம் நூறு ஆண்டுகள் ஆனாலும் அதன் தாக்கம் குறையாது என்கிற அளவுக்கு அப்பிடத்தில் கலைஞரின் வசனங்களும், சிவாஜியின் நடிப்பு மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
View this post on Instagram
தலைப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவும்:
அதோட விரைவில், வெள்ளிவிழா காண இருக்கும் வேளையில் பராசக்தி படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான பணிகளையும் நாங்கள் தொடங்கவிருக்கிறோம் என்கிற செய்தியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிவித்துக் கொள்கிறோம். இந்த தருணத்தில் எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி படத்தின் பெயரை வேறு யாரும் தங்களுடைய திரைப்பட தலைப்பாக பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






