தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருந்தது. இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது. அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
பாரதிராஜா மறைவு:
அதோடு சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வந்தார். இதனிடையே இவர் படத்தில் தன்னுடைய மகன் மனோஜை நடிகன் ஆக்கி இருந்தார். இருந்தாலும் அவரால் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் நடிகரும் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் காலமானார். இவருடைய இறப்பு பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய துயரத்தை கொடுத்தது. தன்னுடைய மகனின் மரணத்திலிருந்து மீண்டு வர முடியாமல் மன வேதனையில் இருந்தார். அதற்கு பிறகு பாரதிராஜாவின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். குறிப்பாக, கடந்த சில மாதங்களாகவே இவர் ரொம்பவே அவஸ்தைப்பட்டு இருந்தார்.

பார்த்திபன் பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் இன்று அதிகாலை பாரதிராஜா சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். இவருடைய இறப்பு திரை உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலருமே நேரில் சென்று இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் தன்னுடைய இரங்கலை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர், பாரதிராஜா ! அரை நூற்றாண்டு சினிமா சரித்திர நாயகன்! அவரை பின் தொடர்ந்து சினிமாவிற்குள் வந்தோர் மட்டுமே இன்றைய சினிமாவில் - இன்றைய சினிமாவாக! .சினிமா என்ற சூரியனைத் தன் திசைக்குள் திருப்பிக் கொண்டவரின் அஸ்தமனத்தைக் கண்டு இன்று கண் விழித்த சூரியனின் கண்களே கடலானது! ஏதோ வந்தார் வென்றார் சென்றார் அல்ல அவர், பூமியில் விதைத்து, பூவினை வளர்த்து, வாசனை பறித்தவர் அல்ல அவர். புதிய நவீன யதார்த்த சினிமா பூக்க இளைய இயக்குனர்கள் இதயத்தில் ஒரு பூமியையே விதைத்தவர்.
“ஒரு பாரதிராஜாகிட்ட இருந்து பாக்யராஜ் வந்த மாதிரி, ஒரு பாக்யராஜ்கிட்ட இருந்து பார்த்திபன் வரப்போறான்”-னு எங்க டைரக்டர் என்னை அறிமுகப்படுத்தினார். இது எனக்கு மட்டுமல்ல 50 வருடங்களாக சினிமாவிற்குள் அறிமுகமானோர் அனைவரும் அவரின் அறிமுகமே. நினைத்துப் பார்க்கையில், நினைத்துப் பார்க்க இயலா சோகம் ! ஒப்பனை / கற்பனை இல்லாத உணர்ச்சிவசப்பட்ட பாராட்டு /வாழ்த்து அவருடையது. அப்பா மகனாக ஒரு பந்தம் எனக்கு மட்டுமல்ல, இன்றைய அனைத்து இயக்குனர்களோடும். இயக்குனர்களின் இமயமாக உயர்ந்தாலும், இதயமாக வாழ்ந்தவர். வந்தவரெல்லாம் போவர், போவோர் யாரும் வாரார். அவர் போல ஜீவனுள்ள ஒரு மனிதர் இனி வரவே மாட்டார் என்பதே அவர் வாழ்வின் உச்சபட்ச அத்தாட்சி.
இன்று காலை 2 மணியளவில் என் சினிமா சூரியன் மீளா உறக்கம் கண்டதாக போலீஸ் கமிஷ்னர் அலுவலகச் செய்தி என் inbox-ன் தொண்டையை அடைத்துக் கொள்ள கண் விழித்தேன். உணர்வற்றுக் கிடந்தேன். இச்செய்தியறியாத என் நண்பர் Aiwo திரு சிவசங்கர் 7.32-க்கு என்னை அழைத்து சமீபத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுடன் இருக்கும் என் புகைப்படத்தைப் பற்றி குறிப்பிட்டு “ முந்திய விட இப்ப நீங்க ஆளே ஜம்முன்னு ஹீரோ மாதிரி இருக்கீங்க ,பாரதிராஜா பாத்தாருன்னா உங்கள போட்டே படம் எடுப்பாரு”என்ற சொல்ல சொல்ல அழுகை அடக்க முடியாமல் உடைந்தது. இது சத்தியம்! இன்னேரத்தில் என் பெருமை சொல்லவா இதை எழுதுவேன்? சில நேரம் வாழ்க்கை சம்பவங்கள் சினிமாவையே மிஞ்சும் சீன் போல இருக்கும். இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் சினிமா என்றால் அதற்கடுத்த வார்த்தை பாரதிராஜா. அல்லது சினிமாவுக்கு இணையான வார்த்தை பாரதிராஜா தான் .அதனால் தான் சிவசங்கர் “சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்வதற்கு பதிலாக பாரதிராஜா வாய்ப்பளிப்பார் என்று அவரையும் அறியாமல் சொன்னார். என்ன சொல்லி என்ன? “என் இனிய தமிழ் மக்களே” என்று கூறி இருக்கிறார்.






