விஜய்-அஜித் குறித்த கேள்விக்கு வேடிக்கையாக நடிகர் பார்த்திபன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் சினிமா துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.
அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர். அந்த வகையில் கடைசியாக பார்த்திபன் இயக்கி நடித்து இருந்த படம் ‘டீன்ஸ்’. இந்த படத்துக்கு டி. இமான் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தை பயாஸ்கோப் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்தது. ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர்.
டீன்ஸ் படம்:
இந்த படத்தில் யோகி பாபு, ஜான் போஸ்கோ, பிராங்கின்ஸ்டன், அஸ்மிதா, பி.கிருத்திகா ஐயர், கே.எஸ்.தீபன், சில்வென்ஸ்டன், உதய்பிரியன், பிரஷிதா, ரோஷன், அஸ்மிதா மகாதேவன்மோர், பிஞ்சி சீனிவாசன், பால சுவாமிநாதன், கால்டுவெல் வேல்நம்பிமோர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மூடநம்பிக்கை, அறிவியல் ஆகியவற்றை மையமாக வைத்து வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பார்த்திபன் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் விஜய்-அஜித் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பார்த்திபன் அளித்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விஜய் அரசியல் குறித்து கேட்டதற்கு பார்த்திபன், நான் யாருடனும் இணைந்து அரசியல் பண்ண விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார். உடனே அங்கிருந்த பத்திரிகையாளர் அஜித், குடும்பத்தை பாருங்கள் என்று சொல்கிறார். விஜய் தரப்பில், எல்லா வேலையும் விட்டுட்டு மாநாட்டிற்கு வாருங்கள் என்று சொல்கிறார்கள்.
அஜித் பற்றி சொன்னது:
இதற்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பார்த்திபன், ரெண்டு பேரும் சொன்னது ஸ்டண்டு தான். குடும்பத்தை பாருங்கள் என்று அஜித் சொல்வது சரியான விஷயம் தான். குடும்பத்தை விட்டு அஜித்தை கடவுளாக பார்ப்பவர்களுக்காக தான் அவர் அப்படி சொன்னார். அவர் சொன்னதை யாரும் கேட்க போவதில்லை. இருந்தாலும் குடும்பத்தை பாருங்கள் என்று அவர் சொன்னது சரியான விஷயம் தான்.
விஜய் பற்றி சொன்னது:
அதேபோல் விஜய் தரப்பில் வேலையை விட்டுட்டு மாநாட்டிற்கு வாருங்கள் என்று சொன்னது அவருடைய போக்கு. ஒவ்வொருவருக்கும் ஒரு போக்கு இருக்கு. நான் என்னுடைய போக்கில் போகிறேன் என்று வேடிக்கையாக பதில் அளித்துவிட்டு சென்று இருக்கிறார்.