தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்பவர் சமுத்திரக்கனி. இவர் நடிப்பில், இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவானப்படம் தான் திரு. மாணிக்கம். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து அனன்யா, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, சின்னி ஜெயந்த், தம்பி ராமையா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். நேர்மையை மையமாக வைத்து நகரும் இப்படம் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் தொழிலாளியான மாணிக்கம் (சமுத்திரக்கனி) தனது மனைவி, இரண்டு மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒரு சூழலில் குடும்ப கஷ்டம், மகளுக்கு ஆகும் மருத்துவ செலவு, கடன் பிரச்சனை என பல கஷ்டங்கள் மாணிக்கத்திற்கு ஏற்படுகிறது. ஆனாலும், அனைவரிடமும் நேர்மையுடன் சமுத்திரக்கனி வாழ்ந்து வருகிறார். அந்த நேரத்தில் சமுத்திரக்கனியின் லாட்டரி சீட்டுக் கடைக்கு பாரதிராஜா வருகிறார்.
அப்போது சமுத்திரக்கனியிடம் தன் மனைவிக்கு மருத்துவ செலவுகள், மகளுக்கு 10 பவுன் போட்டு புகுந்த வீட்டிற்கு அனுப்ப பணம் என்று தனது குடும்ப கஷ்டத்தை எல்லாம் கூறி, சமுத்திரக்கனியிடமிருந்து ஒரு லாட்டரி சீட்டை வாங்குகிறார். ஆனால், பாரதிராஜாவிடம் இருந்த காசு தொலைந்து போக, இந்த லாட்டரி சீட்டை எடுத்து வையுங்கள, நாளை வந்து காசை கொடுத்து விட்டு வாங்கிக் கொள்கிறேன் என்று பாரதிராஜா செல்கிறார். சமுத்திரகனியும் அதன்படியே அந்த லாட்டரி சீட்டை எடுத்து வைக்கிறார்.

ஆனால், மறுநாள் பாரதிராஜா எடுத்து வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கு ரூபாய் 1.5 கோடி லாட்டரி விழுந்து விடுகிறது. அதை அறிந்தசமுத்திரகனி லாட்டரி சீட்டை எப்படியாவது பாரதிராஜாவிடம் சேர்த்து விட வேண்டும் என்று கிளம்புகிறார். ஆனால், இந்த விஷயத்தை அறிந்த சமுத்திரக்கனியின் குடும்பம், அந்த லாட்டரி நாமே எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். ஆனால், அதை எப்படியாவது பாரதிராஜாவிடம் கொடுத்து விட வேண்டும் என்று முடிவு செய்து, நேர்மையுடன் சமுத்திரக்கனி கிளம்புகிறார்.
கடைசியில் என்ன நடந்தது? சமுத்திரக்கனி ஏன் இவ்வளவு நேர்மையாக இருக்கிறார்? அந்த லாட்டரி சீட்டை பாரதிராஜாவிடம் ஒப்படைத்தாரா ? நேர்மையாக இருப்பதால் என்ன நடக்கும்? என்பதே படத்தின் மீதி கதை. இந்தப் படத்தின் கதைக்களமும், அதை திரைகதையாக வடிவமைத்த விதமும் இயக்குனர் சிறப்பாக செய்து இருக்கிறார். பணத்திற்காக மனிதர்கள் எப்படி எல்லாம் மாறுவார்கள் என்பதை இந்த படத்தில் அழகாக காட்டியுள்ளார். குறிப்பாக சமுத்திரக்கனியின் நடிப்பு இந்த படத்திற்கு பெரும்பலத்தை சேர்த்து இருக்கிறது.

மேலும், இந்த படத்தில் நடித்திருக்கும் பாரதிராஜா, நாசர், அனன்யா, தம்பி ராமையா படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக தம்பி ராமையாவின் காமெடி காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் எம் சுகுமார் மற்றும் எடிட்டர் குணா தங்களது வேலைகளை சிறப்பாக செய்து இப்படம் வெற்றி பெற வழி வகுத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
நிறை :
கதைக்களம்
சமுத்திரக்கனி நடிப்பு
விறுவிறுப்பாக செல்கிறது
இசை, ஒளிப்பதிவு அருமை
குறை:
படத்தில் குறைகள் என்று சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை
மொத்தத்தில் திரு. மணிக்கம் சிறப்பான படம்.






