ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர் .இதில் இரண்டு மகள்களுமே மருத்துவம் படித்தவர்கள். டாக்டரான ஐஸ்வர்யா ஷங்கர், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரும் தொழிலதிபருமான தாமோதரனின் மகன்தான் இந்த ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா – ரோஹித் திருமணம் 2021 ஆண்டு கடந்த ஜூன் 27, அன்று மகாபலிபுரத்தில் படு பிரமாண்டமாக நடைபெற்றது.
கொரோனா உச்சத்தில் இருந்த அந்த சமயத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டிருந்தது. இதனால் அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். வரும் மே 1-ம் தேதி ஐஸ்வர்யா – ரோஹித்தின் திருமண வரவேற்பு சென்னையில் நடக்க இருந்தது. இதற்காக ஷங்கரும் அவரது மனைவியும் திரையுலகினரை சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கி வந்தனர். ஆனால் இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சி இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோஹித் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை :
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித் உள்ளிட்ட நான்கு கிரிக்கெட் பயிற்சியாளர்கள்மீது புதுச்சேரியில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனும், மதுரை பாந்தர் கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகன் தான் ரோகித் தாமோதரன்.
16 வயது சிறுமி அளித்த புகார் :
புதுச்சேரியில் இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது . அப்போது கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான தாமரைக்கண்ணன் என்பவர் 16 வயது மாணவிக்கு பயிற்சி அளிக்கும்போது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்து உள்ளார். ஆனால், சங்க நிர்வாகிகள் பயிற்சி அளிக்கும் நபரிடம் மோதல் வேண்டாம் அனுசரித்து போ என்று கூறி விட்டார்கள்.
புகாரின் பெயரில் பாய்ந்த போக்ஸோ :
இதனை அடுத்து அந்த சிறுமி தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர், அதற்கு துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவிடம் புகாரளித்தார். இதையடுத்து குழந்தைகள் நல குழுவினர் விசாரணை நடத்தி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்து உள்ளார்கள். புகாரின் பேரில் மாணவி கிரிக்கெட் விளையாட பயிற்சி அளித்த கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தான் காரணமா ? :
பின் கிரிக்கெட் வீரர் செய்த தவறுக்கு நடவடிக்கை எடுக்காமல் சாதகமாக செயல்பட்டதாக மற்றொரு கிரிக்கெட் வீரர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த காரணத்தால் தான் ஷங்கர் மகளுக்கும் ரோஹித்திற்கும் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் தான் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது தான் உண்மையான காரணமா என்பது தெரியவில்லை.