இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியன். இன்று இவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மக்கள் அனைவரும் நினைவஞ்சலி செலுத்தி உள்ளார்கள். இந்நிலையில் எஸ்பிபிக்கு கூடிய விரைவில் மணிமண்டபம் கட்டுவதாக அவருடைய மகன் எஸ்பிபி சரண் பேட்டியில் தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்பிபி அவர்கள் 2020ஆம் ஆண்டு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார்.
இவருடைய இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மேலும், இவருடைய உடல் சென்னையிலுள்ள தாமரைபாக்கம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று இவருடைய நினைவு நாளை ஒட்டி பொது மக்கள் பலர் இரங்கல் தெரிவிக்க இருந்தனர் . ஆனால், யாரையுமே அங்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இதுதொடர்பாக எஸ் பி சரண் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியது, கொரோனா காரணத்தினால் தான் காவல்துறையினர் பொதுமக்களை அனுமதிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை.
எஸ்பிபி ரசிகர்கள் கூட்டமைப்பு மற்றும் குடும்பத்தினர் மட்டும் இங்கு வந்துள்ளோம். ஓராண்டாக அவர் இல்லாவிட்டாலும் அவர் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. தெலுங்கில் 22 ஆண்டுகளாக அவர் நடத்திக் கொண்டிருந்த நிகழ்ச்சிக்கு இப்போது நான் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறேன். அப்பாவுக்கு என்ன செய்கிறோம் என்பதைவிட அவருடைய பெயரைக் கெடுக்காமல் இருப்பது தான் முக்கியமான ஒன்று. தற்போது நாங்கள் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், அதற்கான பணம், நேரம் எல்லாம் அதிகம் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். மணி மண்டபத்திற்கான திட்டமிடல்கள் முடிந்தவுடன் அதற்கான வேலைகள் தொடங்கப்படும். ஒரு வருடத்திற்குள் மணிமண்டபம் கட்டி முடிப்பது சாதாரணமான விஷயம் இல்லை. ஏனென்றால் மியூசியம், திரையரங்கம் உள்ளிட்ட பல கட்டடங்கள் கட்ட திட்டமிட்டுள்ளோம்.
அதோடு எல்லா வேலைகளும் எப்போது முடியும் என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக கூடிய விரைவில் எல்லா வேலைகளையும் தொடங்குவோம். இதுவரை நாங்கள் தமிழக அரசிடமிருந்து எந்த ஒரு உதவியும் கேட்க வில்லை. அனைத்து வேலைகளையும் ஓவியங்களாக முடித்த பிறகு தமிழக அரசிடம் காட்ட உள்ளோம். எஸ்.பி.பி. தொண்டு நிறுவனம் மூலமாகவே ஒரு பகுதியைக் கட்டவுள்ளோம். மீதமுள்ளதை தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கலாம் என்ற எண்ணம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் அளித்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.