சுழல் வெப்சீரிஸில் வந்த மயானக் கொள்ளை – நடுங்க வைக்கும் இந்த அங்காளியம்மன் விழா உருவான கதை பற்றி தெரியுமா ?

0
958
suzhal
- Advertisement -

இயக்குனர் பிரம்மா, அனுசரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் சுழல். இந்த படத்தை வால் வாட்ச்சர் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும், அமேசான் தளத்தில் முதன் முறையாக தமிழில் வெளிவந்த இணையத் தொடர் சூழல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகி இருக்கிறது. இந்த தொடர் எட்டு அத்தியாயங்களாக வெளிவந்துள்ளது.

-விளம்பரம்-

கோவைக்கு அருகில் மலைப்பிரதேசமான சாம்பலூர் என்ற சிறிய ஊரில் மயான கொள்ளை நடக்கும். ஒவ்வொரு அத்தியாயமும் மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்வை கொடுக்கும் வகையில் பிரம்மாண்டமாக கொடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தில் காட்டப்படும் மயான கொள்ளை பூஜை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். எங்கெல்லாம் மயானம் இருக்கிறதோ அங்கெல்லாம் அங்காள அம்மனின் திருக்கோயில் இருக்கும். அங்கே நிச்சயமாக மாசி மாத அமாவாசை தினத்தில் மயானக் கொள்ளை எனும் நடுங்க வைக்கும் திருவிழாவும் நடைபெறும். ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையை ஈசன் கொய்து விடுகிறார். அந்த பிரம்ம கபாலம் ஈசனின் திருக்கையில் ஒட்டிக் கொண்டுவிட்டது. பிரம்மனின் தலையைக் கொய்யும் போது தேவி சக்தி சிரித்துவிட ஆத்திரம் கொண்ட சரஸ்வதி, மண்ணுலகில் பிச்சியாக,பேயாக திரிந்து கொக்கு இறகும்,கோழி இறகும் உடலெங்கும் போர்த்தி மயானம் காக்கும் காளியாக திரிந்து வா என்று சாபம் விடுகிறார். அப்படியே சக்தி தேவியும் மண்ணுலகில் மேல்மலையனூருக்கு வந்து இறங்கினார்.

மயான கொள்ளை பற்றிய தகவல்:

அங்கே யாசகம் கேட்டு வந்த ஈசனாரின் கரத்தில் ஒட்டியிருந்த கபாலத்தை அங்காளி தன் காலால் மிதித்து அழித்தாள். அந்த நாளே மயானக் கொள்ளை தினமானது. இதே கதை காசியிலும் இருக்கிறது. காசி அன்னபூரணி அங்காளம்மனின் அம்சம் என்று சொல்லலாம். மேல்மலையனூரில் உற்சவ தேவியும் அன்னபூரணியே தான். மாசி மாதம் சிவராத்திரிக்கு அடுத்த நாள் அமாவாசை அன்று அங்காளி பூரண பலத்தோடு தீமைகளை எதிர்க்க தயாராக இருப்பாள். இறந்துபோன ஆன்மாக்களுக்கு உணவை சூரையிடும் நாளே மயானக் கொள்ளை என்று கூறப்படுகிறது. ஈசனின் அங்கத்தை ஆளும் தேவி என்பதால் இவள் அங்காளி என்று ஆனதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் யாருக்கும் கட்டுப்படாத அங்காளியை ஈசன் அடக்கி தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அங்காளியின் அவதாரம்:

அங்காளியின் வேண்டுதலுக்காக சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை நாள் மட்டும் அங்காளியின் கட்டு அவிழ்க்கப்பட்டு அப்போது மட்டும் தீயவர்களின் உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார் சிவன். தட்சனின் யாகத்தில் விழுந்து உயிர்விட்ட தாட்சாயணியின் திருவுருவமே அங்காளி என்றும், யாருக்கும் அடங்காமல் மலையனூரில் திரிந்த அவளை ஈசன் மீண்டும் ஆசுவாசப்படுத்தி ஏற்றுக் கொண்ட நாளே மயானக் கொள்ளை விழா என்றும் இன்னொரு கருத்து உள்ளது. கருவறையில் வீற்றிருக்கும் அங்காளம்மனை ஒருமுறை சென்று தரிசித்தால் எல்லாவிதமான பயங்களும் நீங்கி சுகவாழ்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இப்படி பிரபலமான இந்த மயானக்கொள்ளை பூஜை பல ஊர்களில் நடைபெறுகிறது.

பூஜை குறித்த விவரம்:

மயானக்கொள்ளை நாளில் மகாபாரத்தை தொடர்புபடுத்தி துரியோதனன் படுகளம், சுடுகாட்டுச் சாம்பலில் திரௌபதி உருவம் செய்து கலைக்கும் விழாவும் நடப்பதுண்டு. அதே நாளில் பாரி வேட்டையும் சில இடங்களில் நடப்பதுண்டு. அங்காளியம்மனுக்காக நேர்ந்து கொள்பவர்களும், கரகம் எடுப்பவர்களும் 40 நாள்களுக்கு முன்னரே விரதமிருக்கத் தொடங்குவார்கள். சிவராத்திரியை அடுத்து வரும் அமாவாசை தினத்தில் சுடுகாட்டுக்கு அருகிலிருக்கும் அங்காளியம்மன் கோயிலிலிருந்து ஆடல், பாடல், இசையோடு ஊர்வலமாகச் சுடுகாட்டை நோக்கி சூறையாடக் கிளம்புவார்கள். தங்கள் வீடுகளில் விளையாத மரங்கள், பயிர்கள், நோயுற்ற மனிதர்கள் என மக்கள் வேண்டிக் கொள்வார்கள்.

ஏழை மக்களின் விழா:

அந்த வேண்டுதல் நிறைவேறியதும் இந்த மயானக் கொள்ளை நாளில் நன்றிக்கடனாக கீரைகள், பழங்கள், கிழங்குகள், கொழுக்கட்டை, மஞ்சள், பயிறு வகைகளை அள்ளி அள்ளி அம்மனின் தேரை நோக்கி வீசுவார்கள். நள்ளிரவில் சுடுகாட்டை அடைந்ததும் சாமியாடிகள் வெறி கொண்டு அம்மனாக ஆவேசம் வந்து அங்கு இருக்கும் ஆடு, கோழிகளை வாயால் கடித்து ரத்தம் குடித்து சுடுகாட்டு மண்ணில் புரண்டு அருளாசி தருவார்கள். பிறகு மயானச் சாம்பலால் செய்யப்பட்ட உருவத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். இங்கு கொள்ளை என்றால் காளிதேவி அசுரசக்திகளை விரட்டுவது என்றே பொருள். இந்தச் சாம்பல் மன நோய்களையும், தீய சக்திகளையும் விரட்டியடிக்கும் என்பதால் பொதுமக்கள் எடுத்து செல்வார்கள். அதோடு ஏழை எளிய மக்களின் திருவிழா என்றால் அது மயானக் கொள்ளை விழாதான்.

Advertisement