நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து டி ராஜேந்திரன் கொடுத்திருக்கும் அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகருமான டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பிறகு கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும், சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
மாநாடு படம்:
இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படமும் ஹிட் அடித்தது.
திருமணத்தை முடித்த Ex காதலிகள் :
இந்நிலையில் நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து டி ராஜேந்திரன் கொடுத்திருக்கும் அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு, நயன்தாரா அவரை தொடர்ந்து ஹன்சிகா ஆகியோரை காதலித்தார். ஆனால், இந்த இரண்டு காதலும் தோல்வியில் முடிந்தது. நயன்தாராவிற்கு சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் திருமணம் ஆன நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹன்சிகாவின் திருமணமும் முடிந்தது. ஆனால், சிம்பு மட்டும் இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறார்.
டி ராஜேந்திரன் கோரிக்கை:
இந்த நிலையில் நடிகர் சிம்புவின் தந்தை டி ராஜேந்திரன் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு சென்ற டி ராஜேந்திரன் தன்னுடைய மகன் சிம்புவின் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்திருக்கிறார். அதனை தொடர்ந்து நவகிரக வழிபாடு மற்றும் மூன்று முறை கோயிலை வளம் வந்து கொடிமரம் அருகே விழுந்து தன்னுடைய கோரிக்கையை வைத்தார். பின் தீப விளக்கேற்றி பூஜையும் மேற்கொண்டார்.
சிம்பு திருமணம் குறித்து சொன்னது:
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த டி ராஜேந்திரன், நான் மறுபிறவி எடுத்து இருக்கிறேன். கடந்த முறை பீப் பாடல் பிரச்சனையின் போது இங்கு வந்து என்னுடைய குறைகளை வழக்கறுத்தீஸ்வரர் இடம் கோரிக்கையாக வைத்திருந்தேன். அந்த பிரச்சனை எல்லாம் சுமூகமாக தீர்ந்தது. அதேபோல் எனக்கு, எனது மனைவிக்கு பிடித்த பெண் என்பதை தவிர்த்து என் மகன் சிலம்பரசனுக்கு பிடித்த மகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரர் இடமே கோரிக்கையாக வைத்திருக்கிறேன். இந்த கோரிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார். கூடிய விரைவில் சிலம்பரசன் உடைய திருமணம் ரசிகர்கள், பிரபலங்கள் ஆகியோருடைய ஆதரவுடன் நடக்கும். எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.