இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தடுமாறி தொடரை இழந்துள்ள நிலையில், இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரையன் டென் டோஷேட் முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்திய மைதானங்களில் வெற்றி பெறும் அணியாக மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு சூழல்களிலும் வெற்றி பெறும் அணியாக மாற வேண்டுமெனில், வீரர்களின் மனநிலையிலும் ஆட்ட அணுகுமுறையிலும் மாற்றம் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

'அடாப்ட் ஆக வேண்டும் என்று சொல்வது எளிது... அதை செய்வதுதான் சவால்'
வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி தொடர்ந்து தடுமாறுவது குறித்து பேசிய டென் டோஷேட், "அடாப்ட் ஆக வேண்டும் என்று கூறுவது மிகவும் எளிது. ஆனால் அதற்கான செயல்முறையை வீரர்கள் உணர்ந்து, அதன்படி தங்களை மாற்றிக்கொள்வதுதான் முக்கியம். வெளிநாட்டு சூழலில் நாம் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
'250 ரன்கள் அடிப்பது முக்கியமா... உலகக் கோப்பையை வெல்வது முக்கியமா?'
வீரர்களுக்கு முக்கியமான கேள்வியையும் அவர் முன்வைத்தார். "இந்தியாவில் 250 ரன்கள் அடித்து ரசிகர்களை மகிழ்விப்பதா முக்கியம்? அல்லது மான்செஸ்டர், சவுத்தாம்ப்டன், மெல்போர்ன் போன்ற கடினமான மைதானங்களில் வெற்றி பெறும் அணியாக மாறுவதா முக்கியம்? அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பியை நினைத்து இப்போதே தயாராக வேண்டும்" என்று அவர் கூறினார்.

ஆர்ச்சர் - டங் பந்துவீச்சுக்கு பதில் இல்லை
இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சரியான மாற்றத்தை செய்யத் தவறிவிட்டதாகவும் டென் டோஷேட் ஒப்புக்கொண்டார். "ஜோஃப்ரா ஆர்ச்சரும் ஜோஷ் டங்கும் அபாரமாக பந்துவீசினர். இந்தியாவில் வெற்றி பெற்ற அதே அணுகுமுறையை இங்கும் பயன்படுத்த முயன்றோம். ஆனால் இந்த பிட்ச்கள் சற்று மெதுவாகவும் கூடுதல் பவுன்ஸுடனும் இருந்தன. அதற்கு ஏற்ற மாற்றத்தை எங்களால் செய்ய முடியவில்லை. அதனால்தான் எங்கள் செயல்பாடு மிகவும் ஏமாற்றமாக இருந்தது" என்று அவர் தெரிவித்தார்.
உலகக் கோப்பை வென்ற வீரர்கள் மீது இன்னும் நம்பிக்கை
தொடர் தோல்வியால் வீரர்களின் திறமை மீது சந்தேகம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "இந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள்தான் நான்கு மாதங்களுக்கு முன்பு டி20 உலகக் கோப்பையை வென்றவர்கள். அந்த அணியில் இல்லாத ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது தொடர்ந்து ரன்கள் குவித்து வருகிறார். இந்த தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, வீரர்கள் மீது நம்பிக்கையை இழக்காமல் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும்" என்று டென் டோஷேட் கூறினார்.

அடுத்த இலக்கு உலகக் கோப்பை... மாற்றம் அவசியம்
இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட தோல்வி இந்திய அணிக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. வெளிநாட்டு சூழல்களில் வெற்றி பெற வேண்டுமெனில், தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்லாமல் மனநிலையிலும் மாற்றம் தேவை என்பதையே டென் டோஷேட்டின் கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன. அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அதற்குள் இந்திய அணி இந்த குறைகளை சரி செய்யுமா என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.






