சமீபகாலமாக இயக்குனர்கள் ஜாதி படங்களை தான் எடுக்கிறார்கள் என்று முன்னாள் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இயக்குனர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், ஜி.மோகன் உட்பட பல இயக்குனர்கள் சமீப காலமாக குறிப்பிட்ட சமூகத்தை மையமாக வைத்து தான் படம் எடுகிறார்கள் என்கிற சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற படங்கள் வெளிப்படையாக ஜாதி பிரச்சனைகளை பேசவில்லை என்றாலும், அவர் இயக்கிய கபாலி படத்தில் வெளிப்படையாக ஜாதி குறித்து பேசி இருப்பார். அதேபோல், பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் தென் மாவட்டங்களில் உள்ள ஜாதி பிரச்சனைகளை குறித்து பேசி இருப்பார். அதைத்தொடர்ந்து அவரது கர்ணன், மாமன்னன், சமீபத்தில் வெளிவந்த வாழை படங்களிலும் ஜாதி பிரச்சனைகள் வெளிப்படையாக பேசப்பட்டு இருக்கும்.
ஜாதி படங்கள்:
அதேபோல், நடிகர் ரஞ்சித் சமீபத்தில் ‘ குழந்தை C/O கவுண்டம் பாளையம்’ என்கிற படத்தை நாடகக் காதலை மையமாக வைத்து இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகியதிலிருந்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து கொண்டிருந்தது. இதுபோல் ஒவ்வொரு இயக்குனரும் அவர்களது ஜாதியை மையமாக வைத்து படம் இயக்குவதை டிரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அந்தப் படங்களில் இசை வெளியீட்டு விழா, படத்தின் ப்ரொமோஷன்கள், வெற்றி விழாக்கள் போன்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்கள் ஜாதி குறித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி:
தற்போது இது குறித்து, முன்னாள் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு போட்டியில் பேசியுள்ளார். அதில், சமீபத்தில் நிறைய படங்கள் ஜாதி படமாக எடுக்கிறார்கள். இடைவேளை வரைக்கும் படமாக எடுக்கிறார்கள. இடைவேளைக்குப் பிறகு ஜாதி ரீதியான படமாக கொண்டு போகிறார்கள். இந்த மாதிரி படங்கள் எல்லாம் மக்களுக்கு பிடிக்க மாட்டேங்குது. நம்ம எல்லாமே படிச்சவங்க. இங்கே யாரும் படிக்காதவர்கள் கிடையாது. நான் நிறைய பேருக்கு இன்டர்வியூ கொடுத்து இருக்கேன். அப்படி இன்டர்வியூ எடுக்க வரவங்க கிட்ட நான், நீங்க என்ன ஜாதி என்று கேட்க முடியுமா? இல்லை கேட்டேனா? அந்த மாதிரி ஒரு பைத்தியக்காரன் தான் கேட்பான்.
பணம் இல்லாதவன் பிற்படுத்தப்பட்டவன்:
அந்த மாதிரி காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், அவங்களாகவே போய்ட்டு மேடையில் நாங்கள் பிற்படுத்தப்பட்டோர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி அவங்களுக்கு லேபிள் ஒட்டி இருக்கா என்ன. இப்படி நாங்க பிற்படுத்தப்பட்டோர்கள் என்று பேசுகிறவர்கள் தான் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரில் வந்து இறங்குகிறார்கள். விளிம்பு நிலை மக்கள் குறித்து இவங்க சினிமாவில் காட்டுகிறார்கள். ஆனால், அந்த வாழ்க்கையை இவர்கள் வாழ வில்லை. பணம் இருக்கிறவன் முற்படுத்தப்பட்டவன். பணம் இல்லாதவன் பிற்படுத்தப்பட்டவன். இதுதான் என்னைக்குமே உண்மை.
சினிமாவை தொழிலாக பாருங்கள்:
மேலும், சாதாரணமாக விளிம்பு நிலையில் இருக்கிற ஒருத்தர் மேடையில் போய் இப்படி பேச முடியாது. அப்படி அவன் பேசினால் உள்ள தூக்கி ஒக்கார வச்சிருவாங்க. அதனால, சினிமா என்பது ஒரு தொழில். அதில் ஜாதியை கொண்டு வராதீங்க என்று சொல்கிறேன் என கூறியுள்ளார். அதேபோல், மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பதே கிடையாது. தாழ்த்தப்பட்டவன் என்கிற வார்த்தையை நான் வெறுக்கிறேன். எல்லாருமே இங்கு சன்மானவர்கள் தான். நான் தாழ்த்தப்பட்டவன் என்கிற வார்த்தையை ஏன் உபயோகிக்க வேண்டும். அதனால் ஜாதியை பற்றி பேசாமல் மக்களை மகிழ்விக்கும் படங்களை கொடுங்கள் அதுதான் சினிமாவிற்கு முக்கியம் என்று ஏற்கனவே ஒருமுறை இவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.