15 வயதில் சச்சினின் வரலாற்று சாதனையை முறியடித்த வைபவ்
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த மிகப்பெரிய நட்சத்திரமாக பார்க்கப்படும் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, இன்று இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளார். இதன் மூலம் மிக இளம் வயதில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கிய வீரர் என்ற பெருமையை பெற்று, பல ஆண்டுகளாக நீடித்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்துள்ளார். இந்த சாதனை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

அயர்லாந்து தொடரில் வாய்ப்பு இல்லை... ரசிகர்கள் அதிருப்தி
ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வானார். ஆனால், இரண்டு போட்டிகளிலும் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அந்தத் தொடரில் இந்திய அணி எதிர்பாராத வகையில் தோல்விகளை சந்தித்த நிலையில், "இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்" என்ற விமர்சனம் ரசிகர்கள் மட்டுமின்றி, பல முன்னாள் வீரர்களிடமிருந்தும் எழுந்தது. ரவி சாஸ்திரி, ஏபி டி வில்லியர்ஸ், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், சுப்பிரமணியம் பத்ரிநாத் உள்ளிட்ட பலர், அயர்லாந்து போன்ற தொடரில்தான் வைபவை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
முதல் இங்கிலாந்து போட்டியிலும் காத்திருப்பு... இரண்டாவது போட்டியில் கனவு நனவானது
அயர்லாந்து தொடருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் வைபவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவரது அறிமுகம் மீண்டும் தள்ளிப்போனது. ஆனால், இன்று மான்செஸ்டரில் நடைபெறும் 2-வது டி20 போட்டியில் இந்திய அணி நிர்வாகம் இறுதியாக அவருக்கு வாய்ப்பு வழங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ், சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறார். இந்த தருணம் இந்திய ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்றாகும்.

ஒரே ஐபிஎல் சீசனில் இந்திய அணி... இப்போது சர்வதேச மேடை
ஐபிஎல்லில் அச்சமின்றி உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அதிரடியாக விளையாடிய வைபவ், தனது பேட்டிங்கால் இந்திய அணிக்கான கதவை திறந்தார். வெறும் 15 வயதில் தேசிய அணியில் இடம்பிடித்ததே பெரிய சாதனையாக இருந்த நிலையில், இன்று அந்த நம்பிக்கைக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது அறிமுகம் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால முதலீடாகவே பார்க்கப்படுகிறது.

வைபவின் அறிமுகம்... இந்திய கிரிக்கெட்டின் புதிய தொடக்கம்?
ஒரு இளம் வீரரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வருவதில் இந்திய அணி நிர்வாகம் அவசரப்படாமல் பொறுமையாக செயல்பட்டது. ஆனால், ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு இன்று முடிவு கிடைத்துள்ளது. சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது சாதனையை முறியடித்து இந்திய அணிக்காக களமிறங்கியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறார் என்பதையே தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்றுநோக்கி வருகிறது. அவரது இந்த அறிமுகம் இந்திய கிரிக்கெட்டில் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போட்டியில் வைபவ் சூரியவன்ஷி 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.






