இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் வனம். இந்த படத்தை கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே. பி அமலன், ஜே.பி அலெக்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் வெற்றி, ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா, வேல ராமமூர்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். திக்கு தெரியாத காட்டில் சிக்கிக் கொண்டு திரியும் திகில் படமாக வனம் இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதா? இல்லையா? என்பதை இங்கு பார்க்கலாம்.
கதைக்களம்:
மறுபிறவி, மாயக்கண்ணாடி போன்ற அமானுஷ்ய விஷயத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் வனம். ஒரு ஓவியக் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில் ஒரு குறிப்பிட்ட அறைக்குள் தங்குபவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை கண்டுபிடிக்க ஹீரோ அதே அறையில் தங்கியிருக்கிறார். பின் ஹீரோ வெற்றிக்கும் ஒருவிதமான பயத்தைக் கொடுக்கிறது. இதை கண்டுபிடிக்க தன்னுடைய காதலி ஸ்மிருதி வெங்கட் உடன் வெற்றி முயற்சிக்கிறார். அப்போது பல அமானுஷ்ய விஷயங்களும், திடுக்கிடும் அசம்பாவிதங்களும் வெளியே வருகிறது. மேலும், ஒரு சைக்கோ ஜமீன் மறுபிறவி எடுக்கிறார்.
இதையும் பாருங்க : எம் ஜி ஆர் – சிவாஜி முதல் விஜய் – அஜித் வரை. தமிழ் சினிமாவின் 8 டாப் ஹீரோக்களின் 50வது படம். வெற்றி தோல்வி.
அப்போது அங்கு என்ன விஷயங்கள் நடக்கிறது? என்ன கதை? எதனால் அந்த ஜமீன் இறந்தார்? ஏன் பழிவாங்குகிறார்? கடைசியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.
படம் ஆரம்பித்த உடனே திகில் உடன் கதை செல்கிறது. படத்தில் சில காட்சிகள் சலிப்படையச் செய்தாலும் சில இடங்கள் சுவாரசியமாக இருக்கிறது. குறிப்பாக ஜமீன்தார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அற்புதமாக நடித்திருக்கிறார். மேலும், படத்தில் சம்பந்தப்பட்டவர்களை கொலை செய்யாமல் கொலை செய்ய வேண்டும் என்றே நடக்கும் கொலைகள் எல்லாம் தேவையில்லாத ஒன்று.
இருந்தாலும் யூகிக்க முடியாத அளவில் சில டிவிஸ்ட்கள் படத்தில் ரசிக்க வைத்திருக்கிறது. காடுகளின் அழகையும், திகில் பிஜிஎம் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. அதே போல் கிராபிக்ஸ் டீம் அற்புதமாக தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். ஆனால், இயக்குனர் கதைக்களத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், சுவாரஸ்யமாகவும் கொண்டு சென்றிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.
படத்தில் லாஜிக் எல்லாம் கொஞ்சம் அங்கங்க புரியாத மாதிரி இருக்கிறது. 1920 மற்றும் 2020 என இருவேறு காலகட்டங்களில் கதை நகர்கிறது. ஆனால், இரண்டு கால கட்டங்களையும் வித்தியாசப்படுத்த இயக்குனர் கொஞ்சம் வேலை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும், படத்தில் பெரும்பாலும் முன்கதை காட்சிகள்தான் அதிகமாக காணப்படுகிறது. அந்த முன் கதை சொல்லும் இடம் மலைவாழ் மக்கள் இருப்பிடமாக காட்டுகிறார்கள்.
ஆனால், அங்கு வெறும் மூன்று வீடுகளும் சில மனிதர்கள் மட்டும் இருப்பதால் அந்த காட்சியில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை இதனால் படம் கொஞ்சம் சலிப்படையும் வகையில் தான் இருக்கிறது. வழக்கம்போல் படத்தில் கொலைகள் நடக்கிறது, அதற்கு பின்னணி ஆத்மா வருகிறது, பழிவாங்குகிறது தவிர எந்த ஒரு மாற்றம் இல்லாமல் கதை சென்றிருக்கிறது. இறுதிக்காட்சியில் படத்தில் கொஞ்சம் திருப்பம் இருந்தாலும் படம் முழுக்க வேறு எந்த மாற்றமும் இல்லை.
பிளஸ்:
நடிகர்கள் தங்களுடைய வேலைகளை சரியாக செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், பின்னணி இசை எல்லாம் படத்திற்கு பக்க பலம்.
மைனஸ்:
கதையின் அழுத்தம் ஆழமாக இருந்திருந்தால் பட்ஷம் சுவாரசியமாக சென்று இருக்கும்.
படம் பாதி வரை சலிப்பு தட்டும் வகையிலேயே சென்றிருக்கின்றது.
முன்கதை சொல்லும்போது எந்த ஒரு பெரிய சுவாரசியமும் காட்சிகளும் இல்லை என்று சொல்லலாம்.
இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு எடுத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.
ரசிகர்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியதற்கு ஏமாற்றம் தான்.
மொத்தத்தில் “வனம் — திக்குத் தெரியாமல் நம்மை சுற்ற வைக்கிறது”.