தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. பிகில் படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாஸ்டர் படத்தின் பாடல்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும், மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஜூன் 22ஆம் தேதி என்று சொன்னாலே தமிழகத்தில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது விஜய்யின் பிறந்த நாள் தான். ஜூன் 22ஆம் தேதி அன்று தமிழ்நாடே கோலாகல கொண்டாட்டத்தில் இருக்கும். ஆனால், இந்த வருடம் கொரோனா பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தலை விரித்து கொண்டு கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டு இருப்பதால் மக்களின் இயல்பு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஜூன் 22 ஆம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாட விஜயின் உருவப்பட பேனர்கள் வைத்தல், கொடி தோரணங்கள் கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல்,கேக் வெட்டுதல் போன்ற பல பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்கள். இப்படி எல்லாம் இவர்கள் செய்யப்படுவது குறித்து தளபதி விஜய்க்கு தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் விஜய் அவர்கள் தனது ரசிகர்களுக்கும், நற்பணி மன்றங்களும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் விஜய் அவர்கள் கூறியிருப்பது, கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்ததால் இந்த நேரத்தில் ரசிகர்கள் அனைவரும் ஒன்றுகூடி பிறந்தநாளை கொண்டாடுவதன் மூலம் நோய்த்தொற்று பரவல் இன்னும் பரவ வாய்ப்பு இருக்கிறது. அதனால் எனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம். இந்த தருணத்தில் ரசிகர்கள் ஏழை மக்களுக்கு உதவுங்கள். அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்திடம் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுக்கும் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தொலைபேசி மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரசிகர்களின் வங்கி கணக்கில் விஜய் பணம் செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.