தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக நடிகர் விஷால் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. மேலும், இவர் நடிகர் மட்டும் இல்லாமல் நடிகர் சங்கத்தில் பொது செயலராகவும் இருக்கிறார்.

அதே போல் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்பு நிதியை நடிகர் விஷால் அவர்கள் பொறுப்பற்ற முறையில் தேவையில்லாமல் செலவு செய்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் தனிக்குழு அமைத்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். அதில், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் 12 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் சங்கம் விசாரணை:
இந்த இழப்புக்கு விஷால் தக்க பதில் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை விஷால் தரப்பிலிருந்து எந்த பதிலுமே வரவில்லை என்று தயாரிப்பு சங்கம் குழு கூறப்பட்டிருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதில், இனி விஷால் நடிக்கும் புதிய படத்தினுடைய தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஆலோசனை கேட்ட பிறகு தான் பட வேலைகளை தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை:
இதனால் விஷாலை வைத்து படம் இயக்குவதற்கு பல தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்தில் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ரெட் கார்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விஷால், நான் 2017 முதல் 19 ஆம் ஆண்டு வரை தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியில் இருந்தேன். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த நலிந்த உறுப்பினர்களுக்காக பல நலத்திட்டங்களை செய்திருக்கிறேன்.

விஷால் விவகாரம்:
இதை நான் சங்கத்தின் வைப்பு நிதியை வைத்து தான் செய்தேன். அதுவும் செயற்குழு மற்றும் நிர்வாக குழுவிடம் அனுமதி வாங்கி தான் செய்தேன். அந்தத் தொகை எல்லாம் பொருளாதார ரீதியாக நலிந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் பென்ஷன் ஆகியவற்றிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நான் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி சங்க நிர்வாகிகள் உட்பட அனைவரும் கையெழுத்திட்ட பிறகு தான் அந்த வைப்புத்தொகையை நலத்திட்டங்களுக்கு செலவிட்டேன். அதுவும் வங்கி கணக்குகள் மூலமாகத்தான் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது.
விஷால் தரப்பில் கொடுத்த விளக்கம்:
தனிப்பட்ட முறையில் எதுவும் கொடுக்கவில்லை. இப்போது செயலாளராக இருக்கும் கதிரேசன் தான் அப்போதும் செயலாளராக இருந்தார். வைப்பு நிதியை செலவிடும் தீர்மானத்தில் அவர் கையெழுத்தும் இட்டிருக்கிறார். அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? தனிப்பட்ட முறையில் என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க என்ன காரணம்? என்னை தவறாக சித்தரிக்கும் தயாரிப்பாளர் நிர்வாகத்தினர் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்று விஷால் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.






