யார் நீங்க..? ரஜினியிடம் இதனால்தான் அந்த கேள்வி கேட்டேன்..! காரணம் சொன்ன தூத்துக்குடி இளைஞன்

0
1350
rajinikanth
- Advertisement -

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று, தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

rajini

- Advertisement -

அந்த இளைஞர் குறித்து விசாரித்ததில், அவருடைய பெயர் சந்தோஷ் என்பதும், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்’ என்பதும் தெரியவந்தது. போலீஸாரின் தாக்குதலில் பலத்தக் காயமடைந்து தலையில் பத்துத் தையல்கள் போடப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் போனில் தொடர்புகொண்டு பேசினோம். “தூத்துக்குடியில் நாங்கள் நூறு நாள்களாகப் போராடினோம். அப்போதெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் எங்களைச் சந்திக்கவோ, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ வரவில்லை. போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். பலர் மரணத் தருவாயில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நடந்து இன்றோடு எட்டு நாள்கள் ஆகின்றன. இத்தனை நாள்களாக, இந்தச் சம்பவம் பற்றி ரஜினிகாந்த் வாய்திறக்கவில்லை. பாதிப்புக்குள்ளானவர்களை வந்து சந்திக்கவும் இல்லை. இன்று எதற்காக வருகிறார்? அதுவும் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடவில்லை என்றால் ஒருவேளை அவர் வந்திருக்கமாட்டார். தற்போது அவர் வந்ததன் பின்னணியில் மிகப்பெரிய காரணம் இருக்கிறது.

-விளம்பரம்-

thuthukudi

இன்னும், சில தினங்களில் `காலா’ படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இனியும் மக்களைப் போய்ச் சந்திக்கவில்லை என்றால் அவருடைய படம் தமிழகத்தில் ஓடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் தூத்துக்குடிக்கு வந்து எங்களைச் சந்தித்து நிதி உதவி வழங்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால்தான் எனக்குக் கோபம் வந்து, அவரை அப்படிக் கேட்டேன். எங்களால் எப்படிப் போராடி வெற்றிபெறத் தெரிந்ததோ. அதுபோல எங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் எங்களுக்குத் தெரியும்” என்றார் சந்தோஷ்.

“சில சமூக விரோதிகளால்தாம் கலவரம் ஏற்பட்டது” என ரஜினி பேட்டியளித்திருப்பது பற்றிக் சந்தோஷிடம் கேட்டபோது, “நாங்கள் சமூக விரோதி என்பதை இவர் பார்த்தாரா அல்லது போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துகொண்டார்கள் என்பதை ரஜினி தனது ஏழாவது அறிவை வைத்து உணர்ந்தாரா? நூறு நாள் போராட்டத்தில் ஒரு நாளாவது எங்களுடன் இணைந்து போராடியிருந்தால்தான் அவருக்குக் கருத்துச் சொல்ல தகுதி உண்டு. எனவே, எங்களைப் பற்றிப் பேச ரஜினிக்கு எந்தத் தகுதியும் கிடையாது” என்றார் ஆவேசமாக.

Advertisement