நடிகர் சர்வானந்துக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் சர்வானந்த். இவர் தமிழில் காதல்னா சும்மா இல்லை என்றே படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளி வந்திருந்த எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவருக்கு தமிழில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், இவர் தெலுங்கில் எக்கச்சக்க படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான கணம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
சர்வானந்த் குறித்த தகவல்:
இந்த படம் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதை அடுத்து இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவரின் திருமணம் குறித்து பல கேள்விகள் இணையத்தில் எழுந்து இருந்தது. காரணம், இவருக்கு 38 வயது கடந்து இருக்கிறது. பின் இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ரக்ஷிதா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.
சர்வானந்த்துக்கு ஏற்பட்ட விபத்து:
மேலும், திருமணம் நடைபெற சில நாட்களே இருக்கும் நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகரில் சர்வானந்த் காரில் பயணத்து இருந்தார். அப்போது அவருடைய கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த செய்தி சர்வானந்த் குடும்பத்தினருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் பேர் அதிர்ச்சி அளித்திருந்தது. இந்த விபத்து மிகவும் சின்ன சம்பவம் தான். இது குறித்து சர்வானந்த் பேட்டி அளித்தும் திருமணம் நடைபெறும் என்று கூறி இருந்தார்.
சர்வானந்த் திருமணம்:
பின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸ் என்ற அரண்மனையில் இவர்கள் இருவருக்கும் கோலாகலமாக ஜூன் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ராம்சரண், நடிகர் சித்தார்த், அதிதி ராவ் உட்பட பல திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். மேலும் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருந்தது.
சர்வானந்த்துக்கு பிறந்த குழந்தை:
இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளை ஒட்டி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் வகையில் சர்வானந்த் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தங்களுடைய தேவதைக்கு லீலாதேவி மணி என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலருமே சர்வானந்த்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படத்தை வைரலாக்கியும் வருகிறார்கள்.