இன்னிக்கு இவ்வளவு கஷ்டமான நாளாக மாறும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. காலையில பிரியங்கா இறந்துபோன செய்தியைக் கேள்விப்பட்டதுல இருந்து மனசுக்கு ரொம்ப பாரமாகவும், வருத்தமாகவும் இருக்கு.” – கனக்கும் குரலில் பேசுகிறார், நீலிமா ராணி.
வம்சம்’, ‘தாமரை’ போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர், பிரியங்கா. குடும்பப் பிரச்னைகள் காரணமாக இன்று தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்தத் திடீர் தற்கொலை மக்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அவருடன் நடித்து வந்த நீலிமா ராணியைத் தொடர்புகொண்டபோது அவர் பேசியதுதான் இது. பிரியங்காவின் தற்கொலைக்குப் பின்னால் இருக்கும் ஓர் அழுத்தமான காரணமாக போலீஸார் கூறுவது, ‘அவருக்குக் குழந்தை பெறாமல் இருந்ததும் ஒரு காரணம்’ என்கிறார்கள். தற்போதைய சூழலில் உச்சத்தில் நடித்து வரும் பல நடிகைகள் குழந்தை பெற்றுக்கொள்வதை வாய்ப்புக்காக தள்ளிப்போடுகிறார்கள் என்ற சூழலும் நிலவி வருகிறது. நடிக்க வரும்போது எந்தக் கேரக்டரில் நடிக்க வருகிறார்களோ, அதைப் பொறுத்து இத்தனை வருடங்களுக்கு, நான் தாய்மை அடையமாட்டேன் என்கிற ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார்கள் என்கின்றனர், சிலர். இது போன்ற பல கேள்விகளை அவர் முன் வைத்தேன்.
பிரியங்காவின் இறப்புக்கு குழந்தையின்மையும் ஒரு காரணம் என்கிறார்களே?
ஒரு விஷயத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாம் என்ன செய்யவேண்டுமோ அதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். என் வாழ்க்கையை மற்றொருவரோ அல்லது அவரது வாழ்க்கையை நானோ தீர்மானிக்க முடியாது, வாழ முடியாது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தனித்துவத்தோடு தீர்மானிக்கப்பட்டவை.
தான் செய்யும் வேலையையும், குடும்பத்தையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து. பிரியங்காவைப் பொறுத்தவரை என்ன பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டார் என்ற உறுதியான தகவல் இதுவரை இல்லை. ஆனால், எந்த ஒரு பிரச்னைக்கும் மரணம் மட்டுமே தீர்வு அல்ல. பிரியங்கா போராடி வென்றிருக்க வேண்டும்.
பிரியங்காவிடம் பழகியிருப்பீர்கள்… அவருடனான அனுபவம்?
நல்ல நடிகை. அதிகப்படியான டேக்குகள் வாங்காதவர். இரண்டு வாரங்கள்தான் இருக்கும். பொட்டீக் ஆரம்பிக்கப்போவதாகச் சொல்லி பத்திரிக்கை வைத்து அழைத்தார். விருகம்பாக்கத்தில் ஆரம்பித்திருக்கும் பொட்டீக் வேலையிலும், சீரியல் நடிப்பிலும் மிகத் தீவிரமாக இருந்தவர். நல்ல ஸ்ட்ராங்கான பெண். ரொம்ப போல்டாக இருப்பார். ரொம்ப மெச்சூர்ட் என்று நினைத்தேன். ‘தாமரை’ சீரியலில் கடந்த 12-ம் தேதிகூட, அப்சர் அண்ணா காம்பினேஷனில் நடித்து வந்தார். இப்போது எங்களுடன் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல… தன்னம்பிக்கை இல்லாததும்தான்!” – வேதனையுடன் சொல்கிறார், நீலிமா ராணி.