தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிகாரபூர்வமாக 13 பொது மக்கள் தான் கொல்லப்பட்டார்கள் என்று சொன்னாலும், இதில் 50 மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
13 பேரை பலி வாங்கிய பின்னரே அந்த ஆலையை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. ஆலை மூடப்பட்ட செய்தியை கேட்டு பல்வேறு மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழக மக்களுக்கு கிடைத்த இந்த வெற்றியை தமிழக அரசு தான் பெற்று தந்தது என்று திரை அரங்குகளில் விளம்பரம் செய்து விடாதீர்கள் என்று பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர்கூறியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர்,”தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்து மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்தார் என்று தயவு செய்து திரையரங்குகளில் விளம்பரம் போடாதீர்கள்.
ஏற்கனவே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக முதல்வரான எடப்பாடி பழனி சாமி வெற்றியை பெற்று தந்தார் என்று ஒளிபரப்பாகும் குறும்படம் போதும். இந்த வெற்றி சாமான்ய மக்கள் தங்களது உரிமைக்காக போராடி வாங்கிய வெற்றியாகும். அது அப்படியே இருக்கட்டும் ப்ளீஸ் ” என்று கூறியுள்ளார்.