திரைத் துறையில் அட்ஜஸ்ட்மென்ட் என்கிற பெயரில் பெண்களுக்கு நடக்கும் அநியாயங்கள் குறித்து நடிகை ஷகிலா பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இது குறித்து பலருமே புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் நடிகர் திலீப்குமார் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர் கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது. பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயனிடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், கேரளா அரசு பல காரணங்களால் அப்போது வெளியிடாமல் இருந்தது.
ஹேமா கமிட்டி:
பின் கடந்த 19ஆம் தேதி தான் ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாளத் திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மென்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுமே பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிகிறது. இது குறித்து கேரளா சினிமா உலகில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.
https://www.youtube.com/watch?v=fmXzIbUWZls
பிரபலங்கள் கருத்து:
மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக இதுவரை மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார்கள் ஆன மோகன்லால், மம்மூட்டி எதுவுமே பேசவில்லை. இதை அடுத்து மலையாள திரைப்பட சங்கமான அம்மா சில தினங்களுக்கு முன் தான் கலைக்கப்பட்டது. பாலியல் புகார் குறித்து ஆலோசிக்க அம்மா சங்கம் கூடுவதாக இருந்த நிலையில், மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்து விலகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷகிலா பேட்டி:
இந்நிலையில் இது குறித்து ஒரு பேட்டியில், எல்லா மொழிகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. குறிப்பாக, தெலுங்கு திரையுலகில் கூட பாலியல் தொல்லை உச்சபட்சமாக இருப்பதாகவும் நடிகை ஷகிலா கூறியுள்ளார். மேலும், நடிகைகளுக்கு பாலியல் சுரண்டலை கொடுப்பவரை தண்டிக்க இதுவே சரியான நேரம். இந்தியா முழுவதும் திரைத்துறையில் உள்ள பாலியல் அத்துமீறல் தொடர்பான எல்லா விஷயங்களும் வெளிவர வேண்டும் என்று நடிகை ஷகிலா ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

தீர்வு கிடைக்க வேண்டும்:
மேலும் அவர், இதுபோல் பாதிக்கப்பட்ட அனைவரும் சொல்லிக் கொண்டே இருந்தால் தான் பாலியல் சுரண்டல்களில் ஈடுபடுவோர் நிறுத்துவார்கள் . மலையாள நடிகர் திலீபால் பாதிக்கப்பட்ட நடிகை விவகாரத்தில் யாரும் முன் வந்து நிற்கவில்லை. சில நடிகைகள் குடும்ப சூழலால் பாலியல் தொல்லைகளை வெளியே கூறாமல், சினிமாவை விட்டு போயிருக்கிறார்கள். அதனால் யாரும் பேசாவிட்டால் எந்த தீர்வும் கிடைக்காது, பூனைக்கு யாராவது மணிக்கட்டியே தீர வேண்டும் என்று நடிகை ஷகிலா வேதனையோடு பேசியுள்ளார்.






