நான் சரத்பாபுவின் இரண்டாவது மனைவி இல்லை என்று சினேகா நம்பியார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சரத்பாபு. இவர் 70களில் தொடங்கி 90களில் வரை தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் படங்களில் பணக்கார பையன், நண்பன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
இவர் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டினப்பிரவேசம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதற்கு பிறகு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். கடைசியாக இவர் தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் சின்னத்திரை சீரியல் நடித்திருந்தார். இப்படி இவர் கிட்டதட்ட 50 வருடங்களுக்கும் மேலாக 200 திரைப்படங்களில் நடித்திருந்தார்.
சரத் பாபு உடல்நிலை:
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த சரத் பாபு சமீபத்தில் காலமானார். அவருக்கு வயது 71. இவரின் இறப்பிற்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இதனிடையே நடிகர் சரத்பாபுவின் முதல் மனைவி நடிகை ரமா பிரபா. இவருடன் சரத்பாபு 14 வருடங்கள் வாழ்ந்து சில பிரச்சினைகள் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். பின் இவர் நம்பியாரின் மகள் சினேகாவை இரண்டாம் திருமணம் செய்து இருந்தார்.
சினேகா நம்பியார் பேட்டி:
மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சரத்பாபு- சிநேகா தம்பதி கணவன் மனைவியாக வாழ்ந்து இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சினேகா நம்பியார் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், என்னுடைய அப்பா பெயர் நம்பியார். நம்பியார் என்பது ஜாதியை குறிக்கும். இது கண்ணூரில் இருக்கக்கூடிய மிகச் சிறிய ஜாதி குழு. நான் சென்னைக்கு வந்த பிறகு சினிமாவில் நடிக்க சென்றேன். அப்போது என்னுடைய சினேகா என்ற பெயரிலேயே நிறைய பேர் இருந்தார்கள். அதனால் உங்களுடைய பெயருக்கு பின்னால் உங்களுடைய அப்பாவின் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
சரத்பாபு உண்மையான மனைவி:
பின் நான் என்னுடைய பெயரை சினேகா நம்பியார் என்று மாற்றிக் கொண்டேன். ஆனால், எல்லோருமே நான்தான் நம்பியாரின் மகள் என்று நினைத்துக் கொண்டார்கள். அது மட்டும் இல்லாமல் நம்பியாரின் மகள் பேருமே சினேகா நம்பியார் தான். அதனால் எல்லோரும் நான்தான் நம்பியாரின் மகள் என்று என்னுடைய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டார்கள். உண்மையில் நான் நம்பியாரின் மகள் அல்ல. அதேபோல் சமீபத்தில் மறைந்த நடிகர் சரத்பாபுவின் இரண்டாவது மனைவியும் நான் இல்லை. சோசியல் மீடியாவில் என்னுடைய புகைப்படத்தை போட்டு நான் தான் அவருடைய இரண்டாவது மனைவி என்று எழுதி இருக்கிறார்கள்.
வருத்தத்தில் சினேகா நம்பியார் சொன்னது:
சோசியல் மீடியா மட்டுமில்லாமல் நியூஸ் சேனல்களிலும் நான் தான் சரத்பாபுவின் இரண்டாவது மனைவி என்று என்னுடைய போட்டோவையும் சரத் பாபின் போட்டோவையும் இணைத்து பதிவிட்டு இருக்கிறார்கள். அதிலும் சிலர் நான் வீட்டிற்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டேன் என்றெல்லாம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்கள். இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒருமுறை என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டிருந்தாலே உண்மை தெரிந்து இருக்கும். ஆனால், யாரும் என்னிடம் இதைப் பற்றி சொல்லாமல் என்னை தவறாக சோசியல் மீடியாவில் சித்தரித்து இருக்கிறார்கள். இதை நான் எடுத்துக் கொண்டது போல் எங்களுடைய குடும்பமும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தயவு செய்து இது மாதிரியான தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.