‘ராயன்’ படத்தின் வசூலை 6 நாட்களிலே அமரன் படம் முறியடித்திருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாக ‘அமரன்’ படம் குறித்த செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்தவகையில் தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அமரன்’படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
அமரன் படம்:
தீபாவளி முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியான இப்படம் தான் டாக் ஆப் தி டவுன் ஆக உள்ளது. இந்தப் படத்தை பார்த்து பாராட்டாத ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அமரன் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, சூர்யா, ஜோதிகா, சிம்பு என பல நடிகர்கள் படத்தை பார்த்து தங்கள் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள்.
அமரன் படத்தின் வசூல்:
இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயனின் கேரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளியப் படம் அமரன் தான். இந்தப் படம் ரிலீஸ் ஆன முதல் நாளே உலக அளவில் ரூ. 42 கோடி வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது. ரஜினி, விஜய்க்கு அடுத்தபடியாக அதிக வேகமாக 100 கோடி வசூலை எட்டிய ஹீரோவாக சிவகார்த்திகேயன் தற்போது மாறியுள்ளார்.
அமரன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்:
மேலும், இப்படம் ரிலீசான மூன்றே நாட்களில் 100 கோடி வசூலை ஈட்டியது. சிவகார்த்திகேயனின் கேரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக தற்போது அமரன் மாறி உள்ளது. இதற்கு முன், சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் படமாக ‘டான்’ இருந்து வந்த நிலையில், அதன் வசூல் சாதனையை அமரன் படம் நான்கே நாட்களில் முறியடித்து இருக்கிறது. இப்படி பாக்ஸ் ஆபிஸில் சாதனை மேல் சாதனை படைத்து வரும் அமரன் திரைப்படம் தற்போது தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்தில் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
ராயனை காலி செய்த அமரன்:
நடிகர் தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்த படம் ‘ராயன்’. கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 156 கோடி வசூலித்து இருந்தது. இந்த வசூலை ஆறே நாட்களில் தற்போது அமரன் படம் முறியடித்து மாஸ் காட்டி இருக்கிறது. அது மட்டும் இன்றி இன்னும் சில தினங்களில் அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 200 கோடி என்கிற இமாலய வசூலையும் நிச்சயமாக எட்டிப் பிடிக்கும் என கூறப்படுகிறது. எனவே கோலிவுட்டின் அடுத்த பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக சிவகார்த்திகேயன் உருவெடுத்துள்ளார் என்றே கூறலாம்.