அமரன் படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை.
அமரன் படம்:
மேலும், இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது.
பிரபலங்கள் பாராட்டு:
இந்த படத்தை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.சமீபத்தில் கூட, அமரன் படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பை பாராட்டி ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் கௌரவித்து இருந்தது. இந்த பயிற்சி மையத்தில் தான் முகுந்த் வரதராஜன் பயிற்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமரன் படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமரன் இறுதி வசூல்:
அமரன் படம் முதல் நாளில் இருந்தே மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை செய்து கொண்டிருந்தது. சிவகார்த்திகேயனுடைய பெஸ்ட் திரைப்படமாக அமரன் மாறியிருக்கிறது. உலக அளவில் இந்த படம் 339 கோடி வசூல் செய்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் 2024 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை அமரன் படம் தான் பிடித்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:
தற்போது இந்த தகவல் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலருமே சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதோடு சமீபத்தில் அமரன் படத்தின் சக்ஸஸ் மீட் நடந்தது. தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து இவர் சுதா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் டான் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்திலும் சிவா கமிட்டாகி இருக்கிறார்.