அமித்துடன் அடிக்கடி duet தான் ! ஶ்ரீரஞ்சனியின் கலகல பேட்டி !

0
1591
Sriranjani

சூரியன் எஃப்.எம்-ல் ஒரு வருடம் ஆர்.ஜேவாக வேலைபார்த்த பிறகு, புதுயுகம் ‘கேலி பாதி கிண்டல் பாதி’ நிகழ்ச்சியிலும் பிரபலமானவர் ஶ்ரீரஞ்சனி. தற்போது விஜய் டி.வியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் கலகல நடுவர். எப்போதும் புன்னகையோடு இருப்பவரிடம் பேசினோம்.

ஆஃப் ஸ்கிரீனிலும் நீங்க கலகல தானா?

யெஸ்… எப்பவும் கெக்கபிக்கனு சிரிச்சிட்டுதான் இருப்பேன். எல்லோரையும்போல எனக்கும் கோபம், வருத்தம், சோகம்னு எல்லாமே இருக்கும்தான். ஆனா அதையெல்லாம் எனக்குள்ள வெச்சிட்டு வெளிய சந்தோஷத்தை மட்டுமே வெளிப்படுத்துவேன். ஸ்ப்ரெட் ஹேப்பினஸ் என்பது எனக்குப் பிடிச்ச ஸ்லோகன். அதனாலதான் எப்பவும் ஒரு புத்துணர்வோட, சந்தோஷத்தோட இருக்கேன். இந்தத் தெளிவு எனக்குள்ள வந்திருக்கிறதுக்குக் காரணம், நான் தினமும் யோகா செய்றதாலதான்!

யோகா சிவரஞ்சனியை எப்படியெல்லாம் ஃபைன் ட்யூன் செய்திருக்கு?

என் கேரக்டரே நிறைய மாறியிருக்கு. பாஸிட்டிவிட்டி அதிகமாகியிருக்கு. யோகா மட்டுமில்லாம, மனசுக்கு நிறைவு தர்ற புத்தகங்களும் அதுக்குக் காரணம். அதெல்லாம் எப்பவுமே என்கூடயே இருக்கும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்கிறேன். குறிப்பா, ஓஷோவோட கட்டுரைகள் மற்றும் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கரின் புத்தகங்கள் நிறையப் படிப்பேன்.

வீட்டுலயும் துறுதுறுனுதான் இருப்பீங்களா?!

ஆமா… வீட்ல ஏதாச்சும் வேலை செய்யும்போதுகூட ஜாலிதான் பேசிட்டும், பாடிட்டும்தான் செய்வேன். ஃப்ரீயா இருந்தா பாட்டை போட்டு ஒரே டான்ஸ்தான். விஜய் டி.வியில் ஒளிபரப்பான ‘ஜோடி’ டான்ஸ் நிகழ்ச்சியில் நானும் அமித்தும் ஆடினப்போ, அமித்துக்கு டான்ஸ் கத்துக்கொடுக்கிற டாஸ்க் செஞ்சதை மறக்கவே முடியாது. எனக்கு கர்நாடிக் மியூசிக் தெரியும். அதனால, அப்பப்போ வீட்டுல கச்சேரி நடக்கும். நானும் அமித்தும் அடிக்கடி சேர்ந்து பாடுறது, ‘சேதுபதி’ படத்தில் வரும் ‘கொஞ்சிப் பேசிட வேண்டாம்’ பாட்டுதான். ஒரே டூயட்தான்!

‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சி நடுவர் அனுபவம் எப்படி இருக்கு?

இந்த சீசனில் இருக்கும் மூன்று டீம்களுமே பழம் தின்னு கொட்டை போட்ட டீமுனு சொல்லுவாங்க. நடுவரா இருக்கிறது சேலஞ்சிங்காவும், ஶ்ரீரஞ்சனிக்கு நல்ல அனுபவத்தையும் தருது. ஜாலியா போகுது ஷோ!

உங்களுக்குப் பிடிச்ச வி.ஜே யார்?

இப்போ கேட்டா… கமல் சார்! அவர் ஓர் அறிவுக் கடல். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில வரலாறு, வாழ்க்கை, தன் அனுபவங்கள்னு அவர் பகிர்ந்துக்கிற விஷயங்களைப் பார்த்து பிரம்மிச்சிட்டு இருக்கேன். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் அவ்வளவு டீட்டெய்ல்ஸோட பேசுறார். ஜீனியஸ் அவர். டெடிக்கேஷன், அறம், அரசியல் பார்வைனு தன்னை வியக்க நமக்குக் காரணங்கள் தந்துட்டே இருக்கார். எனக்கும் அமித்துக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். இப்போ வாரத்துல ரெண்டு நாள் அவர் நம்ம வரவேற்பறைக்கு வந்து நம்மகிட்ட பேசுறதை அவ்ளோ ரசிச்சிட்டு இருக்கோம்!

ஜாயின்ட் ஃபேமிலியா நீங்க?

நான், அமித், மாமனார், மாமியார்னு ஜாலி ஃபேமிலி நாங்க. எல்லாருமே வெரி கூல். என் மாமியார், மாமனாருக்கு என் வேலைகள் பற்றி நல்லா தெரியும்ங்கிறதால நைட் லேட்டா தூங்கிறது, காலையில லேட்டா எழறதுனு எதுக்கும் எதுவும் சொல்ல மாட்டாங்க!