கண்டிப்பாக இந்தப் படம் இந்தி ரீமேக் இல்லை” என்று பேச ஆரம்பித்தார் இயக்குநர் பிரபு சாலமன். `கும்கி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஃபேமஸானவர் இவர். இந்தப் படத்தின் ஹிட் இவர் இதுக்கு முன்னாடி இயக்கிய படங்கள் என்னென்னவென்று பலரை விக்கிபீடியாவைத் தேடி ஓட வைத்தது. விக்ரமை வைத்து `கிங்’, அர்ஜூனை வைத்து `கண்ணோடு காண்பதெல்லாம்’, `கொக்கி’, `லாடம்’, மிகவும் பாராட்டப்பட்ட `மைனா’ என்று பல கலவைகளில் படம் கொடுத்த இவரது கமர்ஷியல் ஹிட் படம்தான் `கும்கி’. விக்ரம் பிரபு அறிமுகமான இந்தப் படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அப்போதிலிருந்தே இந்தப் படத்தின் பார்ட் 2 வருமா என்ற ஆர்வம் ரசிகர்களிடம் இருந்தது. இதற்கு பதில் தரும் விதமாக `கும்கி 2′ விரைவில் என்ற அறிவிப்பை வெளியிட்டார் பிரபு சாலமன்.
படத்தில் நடிக்கப் போகும் ஹீரோ, ஹீரோயின் புதுமுகங்கள்தாம் என்ற தகவலும் கசிந்தது. இந்தப் படத்தின் ஹீரோவாக இவரது மகன், மகள் இருப்பார்கள் என்ற பேச்சும் அடிப்பட்டது. இதற்கு எல்லாவற்றுக்கும் மறுப்பு தெரிவித்து வந்த பிரபு சாலமன் படத்துக்கான லோகேஷனை மட்டும் தேடிக்கொண்டே இருந்தார். இதற்கிடையில் சத்தமே இல்லாமல் படத்துக்கான ஃபர்ஸ்ட் ஷெட்யூலை பிரபு சாலமன் முடித்திருக்கிறார் என்ற தகவல் கேள்விப்பட்டு அவரிடம் பேசினேன்.
“உண்மைதான் முதல் ஷெட்டியூல் முடிச்சாச்சு. கேரளா பகுதியில் படப்பிடிப்பை நடத்தி முடிச்சியிருக்கோம். இன்னும் ரெண்டு ஷெட்டியூல் பாக்கியிருக்கு. இந்தப் படத்தைப் பெரிய அளவுல தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு மொழிகளில் எடுக்குறோம். தமிழ் மற்றும் இந்தியில விஷ்ணு விஷால், ராணா டக்குபதி ஹீரோவாக நடிக்குறாங்க.
இந்தியில் மட்டும் விஷ்ணுக்கு பதிலா புலிகிட் சாம்ராட் நடிக்குறார். இந்தப் படம் இந்திப் படத்தின் ரீமேக்னு வெளியே பேச்சு அடிபடுது. ஆனா, அது உண்மையில்லை. இது ரீமேக் படமெல்லாம் இல்லை. என்னுடைய சொந்த ஸ்க்ரிப்ட்தான். `தொடரி’ படம் முடிச்சவுடனே இந்தப் படத்தோட ஸ்க்ரிப்ட் ரெடியாகி இருந்துச்சு. தயாரிப்பாளருக்குப் படத்தோட கதை பிடிச்சிருந்ததுனால உடனே ஷூட்டிங் போயிட்டோம். படத்தை பெரிசா எடுக்கலாம்னு தயாரிப்பாளர்தான் சொன்னாங்க. EROS சினிமா தயாரிக்குறாங்க.
நிறைய யானைகள் படத்துல இருக்கு. வியட்நாம், தாய்லாந்து ஏரியாவில் ஷூட்டிங் நடத்த ப்ளான் பண்ணியிருக்கோம். யானைகள் படத்துல இருக்குறனால `கும்கி 2’னு நினைக்க வேண்டாம். இது `கும்கி 2′ இல்லை. படத்தோட ஹீரோயினா `ஜோயா’னு புதுமுகம் நடிக்குறாங்க.
பெரிய அளவுல இந்தப் படத்தை எடுக்குறனால அடுத்த வருடம்தான் படத்தோட ரிலீஸ் இருக்கும். படப்பிடிப்பு நடந்து இருக்கிற விஷயம் பலபேருக்குத் தெரியாது. கொஞ்சம் சைலன்ட்டாதான் நடத்துனோம். அது ஏன்னு என்னைக் கேட்குறதைவிட தயாரிப்பாளரிடம்தான் கேட்கணும். படத்தோட பேர் அறிவிக்கும் போது பெரிய ஓப்பனிங் இருக்கும். அதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம். படத்தோட ஸ்க்ரிப்ட்டுக்கு எந்த ஹீரோ தேவையோ அவங்களைதான் நடிக்க வைக்க ப்ளான் பண்ணோம்.