சம்சாரம் அது மின்சாரம் கோதாவரி இப்போது என்ன ஆனார் தெரியுமா ?

0
3852
- Advertisement -

“சினிமாவை ரொம்பவே மிஸ் பண்றேன். வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடக்க விருப்பமில்லை. அதனால ஓய்வுக் காலத்தை சந்தோஷமா கழிக்கிற அதேவேளையில, சினிமாவுலயும் நடிக்க ஆசைப்படுறேன்” – உற்சாகமாகப் பேசுகிறார் கமலா காமேஷ். மூத்த நடிகையான இவர், 80, 90-களில் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர். 14 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்.

-விளம்பரம்-

“உங்களை சினிமாவுல பார்த்து நிறைய வருஷங்களாகிடுச்சு. பெரிய இடைவெளி ஏற்பட என்ன காரணம்?”

- Advertisement -

“அச்சச்சோ… நல்ல வாய்ப்பு கிடைச்சா நான் உடனே நடிக்கத் தயார். இடுப்புல ஆபரேஷன் பண்ணிக்கிட்டதால 2003-ல் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நடிப்புக்கு பிரேக் கொடுத்திருந்தேன். ஆனா, அதுக்கப்புறம் நல்லாவே குணமாகிட்டேன். ஆனா, சினிமா வாய்ப்புதான் வரலை. இப்போவே வாய்ப்பு வந்தாலும் உடனே கேமரா முன்னாடி நிற்க நான் தயார்.”

“உங்க முதல் பட வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது?”

-விளம்பரம்-

“சினிமா பத்தி எந்தப் புரிதலும் இல்லாத ஆள் நான். இசையமைப்பாளர் காமேஷ் என் கணவர். கணவரின் பள்ளிக் கால நண்பரான டைரக்டர் ஜெயபாரதி, தன் புதிய படத்துக்கு ஒல்லியா, உயரமா, குடும்பப் பாங்கான பெண்ணைத் தீவிரமா தேடிட்டிருந்தார். அச்சமயம் ஒரு ஸ்டேஜ் டிராமா பார்த்துட்டு நானும் கணவரும் வந்துட்டிருந்தோம். அப்போ வழியில வந்த ஜெயபாரதி என்னைப் பார்த்திருக்கார். அடுத்த நாளே எங்க வீட்டுக்கு வந்தவர், தன் எதிர்பாப்புகளைச் சொல்லி, என்னை நடிக்கச் சொல்லி கணவர்கிட்ட கேட்டார்.

‘என்ன விளையாடுறியா? நூறு பேருக்குனாலும் ஒரே நேரத்துல சமைச்சுப்போட்டு அசத்துவா. இவளைப் போய் நடிக்கக் கேட்கிறியே. நடிப்பெல்லாம் இவளுக்குத் தெரியாது’னு கணவர் சொன்னார். ஆனா, அவர் விடாப்பிடியா என்னை படத்துக்கு கமிட் பண்ணிட்டுப்போயிட்டார். இப்படி விதியின் விளையாட்டால், ‘குடிசை’ படத்துல ஹீரோயினா நடிச்சேன். என் கணவர்தான் அந்தப் படத்துக்கு இசையமைச்சார்.”

“அடுத்தடுத்து ஹிட் அம்மாவா சென்டிமென்ட்ல நிறையப் படங்கள்ல நடிச்சீங்களே…”

“ ‘குடிசை’க்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. ஆனா, 1981-ல் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான் எனக்கு பெரிய பிரேக் கொடுத்துச்சு. அந்தப் படத்துல நடிக்க டைரக்டர் பாரதிராஜா முன்கூட்டியே அட்வான்ஸ் தொகை கொடுத்துட்டுப்போயிட்டார். ஆனா, அதுக்குப் பிறகுதான் அம்மா ரோல்னு தெரிஞ்சுது. ‘அம்மாவா நடிக்க மாட்டேன்’னு அடம்பிடிச்சேன். ‘பாரதிராஜா படத்துல நடிக்கிறதே பெரிய விஷயம். வந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதே’னு கணவர் சொல்ல, நானும் நடிச்சேன். அதுக்குப் பிறகுதான் பல மொழிகள்லயும் நிறைய வாய்ப்புகள் வரிசையா வந்துட்டே இருந்துச்சு.”


“அந்தச் சூழல்ல கணவரின் இறப்பு உங்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துச்சு?”

“ஃபேமஸான இசையமைப்பாளரா இருந்த கணவர் கொடுத்த ஊக்கத்துல நடிச்சேன். ஆனா, அப்போ பணம் எனக்கு இரண்டாம் பட்சமாதான் இருந்துச்சு. அதேசமயம் திடீர்னு கணவர் இறந்துட்டதால, அடுத்து சிங்கிள் மதரா குடும்பத்தை நடத்தவும், கைக்குழந்தையான மகளை வளர்க்கவும் நடிப்புதான் எனக்கான ஒரே வழியா இருந்துச்சு. அப்போதான், `காரணமில்லாம எதுவும் நடக்காது. அதனாலதான் நான் நடிக்க வந்திருக்கேன்’ என்பதும் புரிஞ்சுது. ஆனால், நடிச்சே ஆகணும்ங்கிற நிலையில் நான் இருந்தப்போ, சப்போர்ட் பண்ண கணவர் இல்லாததால், ‘கமலா நடிக்க மாட்டாங்க’னு வதந்தி கிளம்பி ஒரு வருஷமா படவாய்ப்பே வரலை. அதுக்குப் பிறகு ஒரு மலையாளப் படத்துல கமிட் ஆனேன். அடுத்து ‘நான் பாடும் பாடல்’ தமிழ் படத்துலேருந்து அப்படியே தென்னிந்திய நாலு மொழிகள்லயும் பிஸியானேன்.”

“சாஃப்ட்டான அம்மா ரோல்னா, அப்போ நீங்கதான் டைரக்டர்ஸுக்கு முதலில் நினைவுக்கு வருவீங்களாமே…”

“ஆமாம். சாஃப்ட்டான, அதேசமயம் பாவமான அம்மா ரோல்னா, அப்போதைய டைரக்டர்ஸுக்கு நான்தான் நினைவுக்கு வருவேன். எதார்தமான, கிராமத்து அம்மாவா என் ரோல் இருக்கும். அதனால என் இயல்பான நிறத்தைக் குறைக்க, டல் மேக்கப் போடுவாங்க. ஓய்வில்லாம இரவு பகல் பார்க்காம பல மொழிகள்லயும் நடிச்சேன். ரொம்பவே கஷ்டப்பட்ட அந்தக் காலங்களை நினைச்சா இப்போக்கூட கண்கலங்கும்.”

“விசுவின் பல படங்கள்ல நடிச்சுப் புகழ்பெற்றீங்களே…”

” ‘குடிசை’ படம் பாதி எடுத்திருந்த நிலையில, என் நடிப்பைப் பார்த்துட்டு ஆச்சர்யப்பட்டார் விசு. மேலும், ‘உனக்குள்ள இவ்வளவு திறமையை வெச்சுகிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கியே’னு சொல்லி, என்னை மேடை நாடகங்கள்ல நடிக்கச் சொன்னார். அதன்படி சினிமாவுல நடிச்சுகிட்டே, மேடை நாடகங்கள்லயும் பிஸியா நடிச்சேன். தன் இயக்கத்தில் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்துல என்னை நடிக்க வெச்ச விசு, தொடர்ந்து ‘மணல் கயிறு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ உள்ளிட்ட அவரின் ஆறு படங்கள்ல நடிக்க வெச்சார்.”

“உங்க நடிப்புக்கு எந்தச் சூழல்ல பெரிய பிரேக் விழுந்துச்சு?”

“ஷூட்டிங் சமயத்துல இடுப்புல அடிபட்டதால, 1996-ல் ஆபரேஷன் செய்துகிட்டேன். அதுக்குப் பிறகும் வலி குறையலை. ஆனாலும் நடிச்சுகிட்டே இருந்த நிலையில, ஏழு ஆபரேஷன் செஞ்சுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுச்சு. அதனால 2003-ல் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நடிப்புக்கு பிரேக் எடுத்தேன். கடைசியா நடிச்சது, ‘விஷ்வதுளசி’ தமிழ்ப் படம். ரெஸ்ட் எடுத்துட்டு நடிக்கலாம்னு உறுதியா இருந்த நிலையில, அடுத்து வாய்ப்பு வரலை.

“இப்போ யார்கூட வசிக்கிறீங்க?”

“என் மகள் உமா ரியாஸ்கான்கூடதான் வசிக்கிறேன். மகளும், மாப்பிள்ளையும் என்னை சந்தோஷமா பார்த்துக்கிறாங்க. அவங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாமேனு நானும் என் வேலையைப் பார்த்துகிட்டு அமைதியா இருக்கேன்.”

“இப்போ உங்க பொழுது எப்படிக் கழிகிறது?”

“சமையல் செய்வேன். ஏதாச்சும் வீட்டு வேலைகள் இருந்தா செஞ்சுட்டு, டி.வி பார்ப்பேன். வீடியோ கேம் விளையாடுவேன். தோட்டத்துக்கு தண்ணி ஊத்துறது, இயற்கையை ரசிக்கிறதுனு அப்படியே என் பொழுது கழியுது. ஆனா, பகல்ல தூங்கமாட்டேன். நடிக்க விருப்பமில்லாம வந்து, 500 படங்களுக்கும் மேல நடிச்சுட்டேன். ‘ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது’னு சொல்லுவாங்க. அப்படி சும்மா இருக்க கஷ்டமா இருக்கிறதால, நல்ல கதையம்சம் கொண்ட சினிமா அல்லது சீரியல்ல நடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்” எனப் புன்னகைக்கிறார் கமலா காமேஷ்.

Advertisement