பிக் பாஸ் முத்துகுமரன் குறித்து ஜேம்ஸ் வசந்தன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இரண்டு வாரம் முடிந்து மூன்றாவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். மேலும், இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டின் நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக ஓட்டு பெற்று சாச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வந்து விட்டார். பின் முதல் வாரத்திற்கான எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் 8:
மேலும், இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் அர்னவ் வெளியேறி இருந்தார். இந்த வாரம் ஆண்கள் அணியில் இருந்து ஜெப்ரி, பெண்கள் அணியில் இருந்து சாச்சனா இடம் மாறி இருந்தார்கள். பின் மூன்றாம் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் நடைபெற்று இருந்தது. அதில் நேரடியாக தர்ஷா, அருண் தேர்வாகி இருந்தார்கள். பின் ஜாக்லின், அன்ஷிதா,பவித்ரா ஜனனி,சத்யா,முத்துக்குமரன்,சௌந்தர்யா ஆகியோர் நாமினேட்டில் இடம் பிடித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பரிச்சயமில்லாத நபர்களில் ஒருவராக முத்து குமரன் இருக்கிறார். இவர் சிறந்த தமிழ் பேச்சாளர். இவர் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து திறம்பட விளையாடி வருகிறார்.

முத்துக்குமரன் குறித்த தகவல்:
அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் இறுதிவரை இவர் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் இவர் சிவாஜி பேசிய வசனத்தை பேசி இருக்கிறார். இதுதான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துக்குமரன் என்றொரு போட்டியாளர். விஜய் தொலைக்காட்சியின் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் பேச்சாளராக வந்து அடையாளம் பெற்ற திறமைமிகு இளைஞன்.
ஜேம்ஸ் வசந்தன் பதிவு:
இந்த வீட்டினுள் நடக்கிற பலவிதப் போட்டிகளிலும் மிகச் சாதுர்யமாக, கவனமாக, அறிவார்ந்து விளையாடி எல்லார் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருப்பவன். அந்த வீட்டுவாசிகள் எல்லாரும் தங்கள் பல்வேறு திறமைகளைக் காட்டிய ஒரு நிகழ்வில் இவன் கலைஞர் கருணாநிதி எழுதி, சிவாஜி கணேசன் பேசி நடித்த ஒரு காட்சியை அட்டகாசமாகப் பேசி அசத்தினான் என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டேன். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் மூச்சுவிடாமல் கொஞ்சு தமிழில் பேசி கேட்போரைப் பரவசமடையச் செய்தான் என அறிந்தேன். அதற்கு பாராட்டு மழை இன்னமும் கொட்டிய வண்ணம் இருக்கிறது. நேற்று அந்தக் காட்சியை எனக்கு ஒருவர் அனுப்பி வைத்தார். பார்த்தேன். மக்கள் சொன்னது அனைத்தும் சரி.
வசனம் குறித்த சர்ச்சை:
அடுத்தத் தலைமுறை தமிழை அறிந்துணர்ந்திருப்பது மெல்லத் தமிழினி மேலும் உயரும் என உணர்த்தியது. மகிழ்ந்தேன்! ஆனால், ஒரு அம்சம் என் மனதை உறுத்தியது. ஒன்றுதான்.. ஆனால் அது தமிழின் அடிப்படை. எந்த மொழியின் அடிப்படையும் அதுதான். உச்சரிப்பு. இத்தனைப் பக்க உரையை துல்லியமாக மனப்பாடம் செய்து ஆணித்தரமான குரலில் அற்புதமாகச் சொல்லத் தெரிந்த அந்த இளைஞனுக்கு உச்சரிப்பு இவ்வளவு பிழையாக இருப்பது எப்படி தெரியாமல் போகிறது? ல, ள, ழ, ன எழுத்துகள் அவன் பேசிய ஐந்து நிமிடங்கள் முழுவதும் தவறாகவே உச்சரிக்கப்பட்டன. இவ்வளவு தமிழ் தெரிந்த முத்துக்குமரன் எப்படி இந்தத் தவற்றைச் செய்யலாம்? உச்சரிப்புதானே மொழி? என்று கூறி இருக்கிறார்.






