தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரியோ ராஜ். தற்போது ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜோ. இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கியிருக்கிறார். விஷன் சினிமா ஹவுஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் ரியோ ராஜுடன் மாளவிகா மனோஜ், பவ்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ரியோ ராஜ் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய வகுப்பில் மலையாள பெண்ணான மாளவிகா மனோஜ் சேர்கிறார். இவரை முதல் முறை பார்த்ததுமே ரியோராஜ் காதலில் விழுந்து விடுகிறார். பின் எப்படியாவது தன் காதலை சொல்ல ரியோராஜ் முயற்சி செய்கிறார். பின் ஒரு வழியாக தன்னுடைய காதலை மாளவிகாவிடம் சொல்லி விடுகிறார்.
நான்கு வருடங்களுக்கு இருவருமே நெருக்கமான காதலர்களாக இருக்கிறார்கள். பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து மாளவிகாவை பெண் கேட்டு அவருடைய வீட்டிற்கு ரியோ
சந்திக்க செல்கிறார். அப்போது மாளவிகா வீட்டில் சில சர்ச்சைகள் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் பிரச்சினையாக மாறி தன்னுடைய அப்பாவை ரியோ அவமானப்படுத்தி விட்டார் என்று மாளவிகா நினைக்கிறார்.
பின் இருவருமே பிரிகிறார்கள். இருவருக்குமே தனித்தனியாக நிச்சயதார்த்தம் நடக்கிறது. இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் நாயகன், நாயகி இருவருமே காதல் காட்சியில் உணர்வுபூர்வமாக நிஜ காதலர்கள் போல நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் மத்தியில் வரும் சண்டைகளும் நன்றாக இருக்கிறது. ஆனால், சில காட்சிகள் முந்தைய படங்களை பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.
காதலன், கணவன் என இரண்டு பரிமாணங்களில் ரியோ உடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இவரை அடுத்து மலையாள நடிகை மாளவிகாவின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. ரியோவின் மனைவியாக பவ்யா வருகிறார். இவர்கள் இருவருக்கும் மத்தியில் இருக்கும் சண்டைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நீடிப்பார்களா? பிரிவார்களா? என்று எதிர்பார்ப்பை இறுதி கட்டம் வரை இயக்குனர் கொண்டு சென்றிருப்பது தான் படத்தின் ஹைலைட்.
இவர்கள் அடுத்து படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை சேர்த்திருக்கிறது. குறிப்பாக, யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால், ரியோ- மாளவிகா காதல் காட்சிகளை இன்னும் அழுத்தமாக இயக்குனர் சொல்லி இருக்கலாம். வழக்கம்போல காதல் தோல்வி , தாடி வைத்து சுத்துவது, குடிப்பது போன்ற காட்சிகளை காண்பிக்காமல் சுவாரசியமாக கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் படத்தில் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற நிறைய காட்சிகள் இருக்கிறது. இது இன்றைய தலைமுறைக்கு தவறான வழியில் தூண்டும் வகையில் இருக்கிறது. மற்றபடி பெரிதாக படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. வழக்கமான காதல் கதை தான். ரொம்ப ரொம்ப சுமாரான படமாக இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
காதல் கதை
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
கிளைமாக்ஸ் ஓகே
குறை:
வழக்கமான அரைத்த மாவை தான் இயக்குனரும் இந்த படத்தில் அரைத்து இருக்கிறார்
மது அருந்துவது, குடிப்பது போன்ற காட்சிகளை நீக்கி இருக்கலாம்
காதல் கதையில் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம்
முதல் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது
மொத்தத்தில் ஜோ- ஜோர் இல்லை