உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான ‘தூங்காவனம் ‘ படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா தற்போது விக்ரமை வைத்து ‘கடாரம் கொண்டான்’ படத்தை இயக்கியுள்ளார். விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி ஹாசன் போன்ற பலர் நடித்துள்ள இந்த படத்தை உலக நாயகன் கமல் தயாரித்துள்ளார். இந்த படத்தை பற்றிய முழு விமர்சனத்தை தற்போது காணலாம்.

கதைக்களம் :
பிரெஞ்சு மொழியில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘பாயிண்ட் பிளாங்க்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த திரைப்படம். ‘பாயிண்ட் பிளாங்க்’ திரைப்படம் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது அதே கதையை தமிழிலும் ரீமேக் செய்துள்ளனர்.
இந்த படம் முழுவதும் வாசு(அபி ஹாசன்) மற்றும் அவரது கர்ப்பமாக இருக்கும் மனைவி ஆதிரா(அக்க்ஷரா ஹாசன் ) ஆகிய இருவரை சுற்றியே நடக்கும் ஒரு கதை தான். கோலாலம்பூரில் வசித்து வரும் வாசு, ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அந்த சமயத்தில் கடாரம் கொண்டானை (விக்ரம்) மர்ம நபர்கள் துருத்திக் கொண்டு வருகின்றனர். அப்போது அவருக்கும் விபத்து ஏற்பட்டு விட அவர் வாசு மருத்துவராக பணிபுரியும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்.

அதன் பின்னர் தான் தெரிகிறது கடாரம் கொண்டானான விக்ரம் ஒரு முன்னாள் சீக்ரெட் ஏஜெண்ட் என்றும் அதன் பின்னர் அவர் டபுள் ஏஜென்டாக மாறி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவருக்கு தெரிய வருகிறது. இதனால் போலீசாரின் பலத்த பாதுகாப்புடம் கடாரம் கொண்டான் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மர்ம நபர்கள் வாசுவின் மனைவியான ஆதிராவை கடத்தி சென்று விடுகின்றனர். அதன் பின்னர் வாசுவிற்கு ஒரு போன் வருகிறது. அதில் கடாரம் கொண்டான் மருத்துவமனையில் இருந்து தப்பிக்க செய்தால் உனது மனைவியை நாங்கள் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்று கூறுகின்றனர். இதனால் கடாரம் கொண்டானை மருத்துவமனையில் இருந்து தப்பிக்க உதவி செய்கிறார் வாசு.
பின்னர் வாசு, தனது மனைவியை காப்பாற்றினாரா, கடாரம் கொண்டனுக்கும் வாசுவிற்கும் என்ன தொடர்பு, கடாரம் கொண்டானின் உண்மையான பின்னணி என்ன என்பதை ஆக்க்ஷன், செண்டிமெண்ட் கலந்து கொண்டு செல்கிறது மீதிக்கதை.
பிளஸ் :
படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் விக்ரம் தான், கடாரம் கொண்டான் என்ற பெயருக்கு ஏற்றார் போல அவரது லுக் தெறிக்கவிட்டுள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஸ்க்ரீன் பிலே ஹாலிவுட் தரத்திற்கு ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு இருக்கிறது, இரண்டாம் பாதியில் விக்ரம் கலக்கி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமாக ஜிப்ரானின் இசை இருக்கிறது.

மைனஸ் :
படத்தின் முக்கிய கருவே வாசுவாக வரும் அபி ஹாசன் மற்றும் ஆதிராவாக வரும் அக்ஷரா ஹாசன் தான். இவர்கள் இருவருக்கும் அதிக பிரேம்கள் வைத்திருப்பது கொஞ்சம் சலிப்பை தருகிறது. படத்தின் முதல் பாதி விக்ரம் வரும் காட்சிகளை தவிர்த்து மற்ற காட்சிகள் மிகவும் இழுவையாக இருக்கிறது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒற்றுமையை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாம்.
இறுதி அலசல் :
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வந்த நாள் முதலே இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிரிபார்ப்பு ஏற்பட்டு இருந்தது. முற்றிலும் ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற ரசிகர்களை இந்த படம் ஓரளவிற்கு மட்டுமே திருப்திபடுத்தியுள்ளது என்பது தான் உண்மை. வெறும் கெட்டப்பை வைத்து மட்டுமே ஒரு படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் அடைய செய்துவிட முடியாது என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம். படம் பார்க்கவே முடியாது என்று சொல்ல முடியாது, ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தது ‘அதுக்கும் மேல’ தான்.