இயக்குனர் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவாக கருணாஸ் குரல் கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் விழா ஒன்றில் வெற்றிமாறன், ‘சினிமா என்பது வெகுமக்களை மிக எளிய முறையில் சென்றடைய கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது கலை முக்கியம். திராவிடம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று நிறைய பேசினார்கள். ஆனால், மக்களில் இருந்து விலகி எந்த கலையும் முழுமை அடையாது. மக்களுக்காக தான் கலை. மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும்.
ஒருவேளை நாம் இன்று அதை தவறினால் ரொம்ப சீக்கிரமாக நிறைய அடையாளங்களை இழந்து விடுவோம். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்படுவதாக இருக்கட்டும், ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவது இருக்கட்டும் என்று பல அடையாளங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது சினிமாவிலும் நடக்கும் என்று பேசி இருந்தார். வெற்றிமாறனின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் தற்போது விவாதம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் வெற்றிமாறன் கூறிய இந்த கருத்து உண்மையானது சரியானது என்று கருணாஸ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.
கருணாஸ் அளித்த பேட்டி:
அதாவது, ராஜராஜ சோழன் காலத்தில் ஏது இங்து? ஏது இந்தியா? இது எல்லாம் ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது தான். இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். பல தேசிய இனங்கள் இணைந்து வாழும் இந்திய நாட்டில் பல்வேறு மதங்கள் இருப்பது இயல்பானது. அதனால் தான் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்கிறோம். ஆனால் ஒற்றை மதம் மட்டும் தலையில் தூக்கி எல்லாவற்றையும் விழுங்க நினைப்பதுதான் தற்போது சிக்கலாக உருவாகிறது. அந்த காலத்தில் சைவம், வைணவம், ஆசீவகம் என்று பல மதங்கள் இருந்தது. ராஜராஜன் சிவனை வழிபட்ட சைவர் என்பது வரலாறு. ஆனால், ராஜேந்திர சோழனை இந்துமதம் மன்னர்கள் என்று சொல்வது அல்லது மாற்ற நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது.
மதம் குறித்து சொன்னது:
காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தங்களுடைய தெய்வத்தின் குரல் நூலில், ‘சைவராகவும், வைணவராகவும், இன்னும் பல்வேறு மதத்தினராகவும் இருந்த நம்மை இந்து என்று ஆங்கிலேயர்கள் ஒன்றாக இணைத்ததால் பிழைத்துக் கொண்டோம்’ என்று கூறியிருந்தார். அந்த பிழைத்துக் கொண்டோம் என்ற வார்த்தையில் இருந்தால் தற்போது எல்லாவற்றையும் தமதாக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆரிய பிராமணர்கள். ஆரியம் எப்போதுமே ஒன்றை எதிர்க்கும். அது முடியவில்லை என்ற உடன் அதை தனதாக்கிக்க நினைக்கும். அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்காக மாற்றிக் கொண்டது. இப்போதும் மாற்றிக் கொண்டே இருக்கிறது.
ராஜராஜ சோழன் குறித்து சொன்னது:
ராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற நினைப்பது மட்டுமா நடந்தது? தமிழை சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்றார்கள். சிந்து சமவெளி நாகரிகமான தமிழருக்கு நாகரீகத்தில் இடம்பெற்ற காளையை குதிரையாக திரித்தார்கள். முப்பாட்டன் முருகனை சுப்பிரமணியன் ஆக மாற்றினார்கள். முப்பால் யாத்த வள்ளுவனை பெருந்தகைக்கு காவியும், புனலும் அணிவித்தார்கள். தஞ்சை பெரிய கோவிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள். எங்கெல்லாம் காவியாக்க முடியுமோ அது எல்லாம் மாற்றி விட்டார்கள். கடைசியில் அது கலைத் துறைக்கு வந்துவிட்டது. இயக்குனர் வெற்றிமாறன் சொன்னது மிகச் சரியானது. நாம் இனியாவது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
பாஜக செய்யும் வேலை:
தமிழர் பண்பாட்டு அடையாளங்களை, கோயில்களை, ஊர் பெயர்களை பல்வேறு தளங்களில் இந்தி சமஸ்கிருத காவிய அடையாளங்களாக மாற்றுவதற்கான நுண் அரசியல் பலகாலமாக நடந்து கொண்டிருக்கின்றது. சமீப காலமாக வேகமாக படையெடுத்து இருக்கிறது. அதை நாம் முறியடிக்க வேண்டும். இந்தியாவை பாரத், பாரத் வர்ஷா என்று மாற்றுவதற்குரிய சட்ட வேலைகளை பாஜக நடத்தி வருகிறது. மிக விரைவில் இந்தியா பாரத் என மாறும். இந்து மதம் என்னவாக மாறும் என்பது தெரியவில்லை? இதனால் எல்லோரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கலை மக்களுக்கானது, கலைப் பண்பாடு அடையாளங்கள் அந்தந்த மண்ணுக்குரியது. அதை மாற்ற நினைப்பதும் தனதாக்க நினைப்பதும் அறத்திற்கு எதிரானது என்று ஆவேசமாக கருணாஸ் பேசி இருக்கிறார்.