தமிழ் சினிமா உலகில் மறக்க முடியாத மற்றும் ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்று வீரபாண்டிய கட்டபொம்மன். இதில் வீரபாண்டிய கட்டபொம்மனாக சிவாஜி நடித்தார் என்பதை விட வாழ்ந்து இருந்தார் என்றே சொல்லலாம். அதேபோல் அந்த படத்தில் ஜாக்சன் துறையாக நடித்திருந்தவர் சி ஆர் பார்த்திபன். இவர் தமிழ் திரை உலகில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர்.
இவர் மேடை நாடக நடிகரும் ஆவார். இவர் முதன் முதலில் இந்தி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு புதுமைப்பித்தன் என்ற படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களில் நடித்திருந்தார்.
சி ஆர் பார்த்திபன் திரைப்பயணம்:
கிட்டத்தட்ட இவர் 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஜாக்சன் துறையாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார். மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியாகி 61 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இவர் 2021 ஆம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக தன்னுடைய 91 வது வயதில் இறந்தார்.
சி ஆர் பார்த்திபன் பேட்டி:
இந்நிலையில் இறப்பதற்கு முன்பு சி ஆர் பார்த்திபன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், என்னுடைய சொந்த ஊர் வேலூர். நாங்கள் ராஜாஜியின் பங்காளிகள். பள்ளிப் பருவத்திலேயே எனக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் வந்தது. கல்லூரி படிப்பை நான் லயோலாவில் முடித்தேன். படித்துக் கொண்டே அப்படியே நடித்தேன். பிறகு தலைமை செயலகத்தில் வேலை செய்தேன். அதற்கு பிறகு தான் நாடக குழுவில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின் இரண்டு மூன்று வருடத்தில் வேலையை விட்டு நான் நடிக்க வந்து விட்டேன்.
சினிமா பயணம்:
அப்போதுதான் பராசக்தி படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அதுவரைக்கும் நடிக்கணும் என்று நடித்துக் கொண்டிருந்தேன். சிவாஜி நடிப்பை பார்த்து தான் ஒரு ஆசையோடும் வெறியோடும் நடிக்க தொடங்கினேன். நான் ராஜாஜி, அண்ணா, கலைஞர், எம்ஜி ஆர், ஜெயலலிதா, என்டிஆர் என்று ஆறு முதலமைச்சர்களுடனும் வேலை செய்து இருக்கிறேன். மேலும், சிவாஜி உடன் நான் நிறைய படங்கள் செய்திருக்கிறேன். நான் சிவாஜியின் தீவிர ரசிகன்.
சிவாஜி குறித்து சொன்னது:
நம்மில் யாரும் கட்டபொம்மனை நேரில் பார்த்ததில்லை. சிவாஜி தான் கட்டபொம்மனை நம் கண் முன் நிறுத்தி காண்பித்தார். நாட்டிற்காக போராடிய எத்தனையோ பேரை நாம் மறந்திருக்கிறோம். அந்த வகையில் கட்டபொம்மன் யாருக்கும் நியாபகம் இல்லை. சிவாஜி தான் கட்டபொம்மனை அனைவருக்கும் நினைவு படுத்திருந்தார். அந்தப் படத்தில் என்னுடன் படித்தவர் ஒருவரின் மூலமாகத்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதோடு நாடகங்களில் அதிகமாக போலீஸ் ஐஜி கதாபாத்திரம் தான் செய்து கொண்டிருந்தேன். அதற்கு பிறகு தான் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்தேன் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.