இயக்குனர் மறைந்த கேவி ஆனந்த் குறித்து அவருடைய மகள் சாதனா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியவர் கே.வி.ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அதிலும், குறிப்பாக ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களான முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களுக்கு கே வி ஆனந்த் தான் ஒளிப்பதிவு செய்தார் என்பது குறிபிடத்தக்கது.
அதை தொடர்ந்து கே வி ஆனந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் முதன் முதலில் இயக்கிய படம் கனா கண்டேன். அதன் பின்னர் இவர் அயன், கோ, மாற்றான், அனேகன், காப்பான் போன்ற பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார். இதனை அடுத்து இவர் தன்னுடைய அடுத்த படம் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். பின் இவர் சிகிச்சை பலனின்றி கே வி ஆனந்த் காலமானார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
கே வி ஆனந்தின் பிறந்தநாள்:
இந்நிலையில் இன்று மறைந்த இயக்குனர் கே வி ஆனந்தின் பிறந்தநாள். இது குறித்து அவருடைய மகள் சாதனா பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், அப்பாவோட ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நானும் என்னுடைய தங்கையும் எங்கள் கையாலே செய்த பொருட்களை தான் கிப்டாக கொடுப்போம். நான் தான் ஸ்பெஷல் ஆக கேக் செய்வேன். கடையில் வாங்குவதையோ, ஆடம்பர பொருள்களையோ கிப்டாக கொடுத்தால் அப்பாவிற்கு பிடிக்காது. அப்படியே தூக்கி ஓரமாக வைத்துவிடுவார். அதுவே அவருக்காக நாங்கள் ஆசை ஆசையாய் ரெடி பண்ண கிப்ட் கொடுத்தால் ரொம்பவே ரசித்து பாராட்டுவார். அதை பொக்கிஷம் போலவும் பாதுகாப்பார்.
கே வி ஆனந்த் மகள் பேட்டி:
எங்க அப்பா எப்பவுமே ரொம்ப சிம்பிளான மனிதர். தேவையில்லாததற்கு எல்லாம் ரொம்ப செலவு பண்ண மாட்டார். ஆரம்ப காலத்தில் அவர் ஒளிப்பதிவளராக இருந்தபோது எப்படி இருந்தாரோ கடைசி வரைக்கும் அப்படித்தான் வாழ்ந்தார். பணம் வந்ததும் சிலருடைய வாழ்க்கை மாறிவிடும். அப்பா எப்போதும் ஒரே மாதிரி தான் இருந்தார். என் அப்பா இயக்குனர் ஆகிவிட்டதால் நான் ரொம்ப நாளா ஐபோன் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் வாங்கி தரவில்லை. அதற்கு காரணம், எளிமையான வாழ்க்கை வாழனும் என்று சொன்னார். அப்பா மாதிரி தான் நாங்களும் இப்போ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்பா நினைத்திருந்தால் எங்களை சினிமாவுக்குள்ளே கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவர் அதை விரும்பவில்லை.
அப்பாவின் மனநிறைவு:
எங்கள் சுதந்திரத்திலும் விருப்பத்திலும் தலையிடக்கூடாது என்று நினைத்தார். நாங்களே முடிவெடுக்கணும் என்று சொல்லுவார். எங்களுடைய விருப்பத்திற்கு தடையாக அப்பா இருந்தது கிடையாது. எனக்கு ஆர்க்கிடெக் படிக்கணும் என்பது ஆசை. என்னுடைய தங்கை சினேகா டாக்டராக ஆசைப்பட்டாள் . இரண்டு பேரையுமே அவரவர்கள் ஆசைப்பட்ட துறையில் சாதிக்க வைத்தார். அதேபோல் அப்பா இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று ஒரு நாளும் கவலைப்பட்டது கிடையாது. அப்பா ஒரு பெண்ணியவாதி. எங்களை ரொம்ப போல்டாக வளர்த்திருக்கிறார். முக்கியமாக திருமணத்திற்கு பிறகு நாங்கள் கணவரை சார்ந்திருக்க கூடாது, வேலைக்கு போகணும், உழைக்கணும், நீங்கள் சம்பாதிக்கணும், இண்டிபெண்டண்டா இருக்கணும் என்று சொல்லி சொல்லி வளர்த்திருக்கிறார். மேலும், அப்பாவிற்கு செடி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். அப்பாவுடைய பெரிய பொழுது போக்கே செடி வளர்ப்புதான். இயற்கை முறையில் தர்பூசணி விலை வைத்து 15 ஆயிரம் ரூபாய் லாபம் எடுத்தார்.
கே வி ஆனந்தின் கடைசி தருணம்:
சினிமாவில் கோடி கோடியா சம்பாதித்தார். ஆனால், விவசாயத்தில் கிடைத்த அந்த 15 ஆயிரம் ரூபாய் கொடுத்த மனநிறைவு எதிலும் கிடைக்கவில்லை என்று அப்பா சொல்லுவார். விவசாயம் என்றால் அவருக்கு அப்படி ஒரு உயிர். எங்கள் வீட்டு பாத்ரூமில் இருந்து எல்லா இடத்திலும் செடிகள் தான் வளர்த்து வந்தார். அப்பா கடைசியாக ஹாஸ்பிடலுக்கு போகும்போது கூட செடிக்கு தண்ணி ஊத்து என்று சொல்லிட்டு தான் போனார். அட்மிட் ஆன பிறகும் போன் பண்ணி நான் சீக்கிரம் வந்து விடுவேன் என்று சொன்னார். நாங்களும் அப்பாவோட வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருந்தோம். ஆனால், அந்த கடைசி ரெண்டு நாள் நிலைமை மாறிவிட்டது. இப்படி ஆகும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அப்பா இல்லாத இந்த இரண்டு வருடங்கள் வெறுமையாக இருக்கிறது. வேதனையோடு தான் நான் தினமும் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறேன். அடுத்து ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அவரே எங்களுக்கு அப்பாவாக வரவேண்டும். ஹாப்பி பர்த்டே லவ் யூ அப்பா என்று கண்கலங்கி பேசியிருந்தார்.