மாமன்னன் படத்தை வெளியிட்டால் திரையரங்கையை தாக்குவோம் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் வெளியிட்டு இருக்கும் எச்சரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள்.
மாமன்னன் படம்:
இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஜூன் 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவித்திருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இது தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது. மேலும், விழாவில் மாரி செல்வராஜ், தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கினேன்.
ஆடியோ லான்ச் விழா:
கமலஹாசனின் தேவர் மகன் படம் ஜாதி பெருமையை அப்பட்டமாக பேசி இருந்தது. மாமன்னன் உருவாவதற்கும் தேவர் மகன் படம் தான் காரணம். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம் என்று கமலஹாசனை மாரி செல்வராஜ் வம்புக்கு இழுத்து இருக்கிறார். இப்படி கமலஹாசனின் தேவர்மகன் படத்தை குறித்து மாரி செல்வராஜ் பேசியது கமல் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மாரி செல்வராஜூக்கு எதிராக மீம்ஸ்களை தெரிக்க விட்டு வருகிறார்கள்.
மாமன்னன் படம் குறித்த சர்ச்சை:
தற்போது மாரி செல்வராஜ் கூறிய கருத்துக்கள் தான் இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே படம் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் வெற்றி திரையரங்கத்தில் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தாக்குதல் நடத்துவோம் என்று தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
தேனி மாவட்ட கட்சியினர் விடுத்த எச்சரிக்கை:
அது மட்டும் இல்லாமல் தமிழக அரசே இந்த படத்தை தடை செய்! தமிழகத்தில் ஜாதி மதங்களை உருவாக்க நினைக்கும் மாமன்னன் படத்தை உடனடியாக தடை செய்! போராட தூண்டாதே! என்றெல்லாம் போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள். இப்படி படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் மாமன்னன் படம் குறித்து பல பிரச்சனைகள் நிலவிக் கொண்டிருக்கும்போது தேனி மாவட்ட கட்சியினர் விட்டு இருக்கும் எச்சரிக்கை சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.