தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கார்த்திக். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கிறது. அந்தவகையில் கார்த்திக்கின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்த படம் பருத்திவீரன். இயக்குனர் அமீர் சுல்தான் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன். இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடித்து தன் குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் செவ்வாழை ராஜூ.
இந்நிலையில் புஹாரி என்ற யூடுயூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் கூறியது, நான் தொழில், அரசியல், விவசாயம், சினிமா என பல வேலைகளை செய்து இருக்கிறேன். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு பெயர் ராஜு வந்ததற்கு காரணம். அப்போ ராஜு என்பவர் ஒருவர் பிரபலமாக இருந்தார். அவருடைய பெயரை தான் எனக்கு ராஜேந்திரன் என்று வைத்தார்கள். பின் நான் சிவப்பாக இருந்ததால் செவ்வாழை ராஜு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அப்படித்தான் எனக்கு பெயர் வந்தது. எங்கள் குடும்பம் விவசாயம் குடும்பம். நாங்கள் ஆரம்பத்தில் விவசாயம் தான் பண்ணிட்டு இருந்தோம்.
செவ்வாழை ராஜு அளித்த பேட்டி:
ஆனால், விவசாயத்தில் பெரியதாக எந்த ஒரு லாபமும் கிடைக்கவில்லை. விவசாயத்தில் பல முறை முதலீடுகள் போட்டு நஷ்டம் ஆனதுதான் மிச்சம். விளைச்சல் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் பல கஷ்டங்கள் பட்டோம். அதனால் தான் விவசாயத்தை விட்டு விட்டு அரசியலுக்கு சென்றேன். நான் மிகப்பெரிய எம்ஜிஆர் ரசிகர்.அவருடைய கட்சியில் போய் சேர்ந்தேன். எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்போது நான் தேனி மாவட்டத்தில் பிரசிடன்ட்டாக இருந்தேன். அப்போது அவர் கட்சிக்காக பயங்கரமாக உழைத்தேன். பின் எப்படியாவது எம்ஜிஆர் கட்சியில் ஒரு பதவி வாங்கிடலாம் என்று முயற்சி செய்தேன்.
அரசியலில் செவ்வாழை ராஜு :
ஆனால், எனக்கு கல்வித் தகுதி இல்லை என்று தரவில்லை. அதற்கு பிறகு ஜெயலலிதா ஆட்சி வந்தது. ஜெயலலிதாவுக்கு பாதுகாவலராக இருந்தேன். அப்படி எனக்கு ஒரு முறை அடி எல்லாம் பட்டு ஜெயலலிதா அம்மா தான் என்னை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அந்த அளவிற்கு ஜெயலலிதா அம்மாவிற்கு என்னை தெரியும். இருந்தாலும் எனக்கு கல்வி தகுதி இல்லை என்று அவர்களும் எனக்கு எம்எல்ஏ, எம்பி என எந்த ஒரு பதவியையும் தரவில்லை. கடைசி வரைக்கும் என்னை ஒரு வேலைக்காரனாக தான் கட்சியில் வைத்திருந்தார்கள். எனக்கு இந்த தொண்டை இந்த அளவிற்கு மாறியதற்கு காரணம் கலைஞர் தான் காரணம்.
செவ்வாழை ராஜு குரல் மாற்றத்திற்கு காரணம்:
அவர் எம்ஜிஆரை திட்டுவார். என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவரை திட்டி திட்டி தான் என்னுடைய குரல் இப்படி மாறி கிழிந்துவிட்டது. இதனால் பலரும் என்னை விமர்சித்து இருந்தார்கள். ஆனால், சின்ன வயதில் என்னுடைய குரல் அவ்வளவு அழகாக இருக்கும். பின் அரசியலில் எந்த ஒரு உதவியும் கிடைக்காத விரக்தியில் தான் சினிமாவில் போகலாமென்று நினைத்தேன். எனக்கு முதன் முதலாக பாரதிராஜா படத்தில் தான் வாய்ப்பு கிடைத்தது. பாரதிராஜாவும், நானும் பங்காளி. அவருக்கும் தேனியில் நிலம், வீடு எல்லாம் இருக்கு. எனக்கும் எல்லாம் இருக்கு. ஆனால், இரண்டு பேரும் பங்காளி என்று தெரியாது.
செவ்வாழை ராஜு திரைப்பயணம்:
ஒருமுறை பாரதிராஜா படத்திற்காக ஒரு கம்பீரமான பஞ்சாயத்து தலைவர் நபராக நடிக்க ஆட்கள் தேவை என்று நோட்டீஸ் விட்டிருந்தார். அதை பார்த்து நான் பாரதிராஜாவை சந்திக்க போனேன். பிறகு அவரிடம் நான் எண்கள் உறவு பற்றி சொன்னேன். பிறகு நான் நடித்த முதல் படம் கிழக்கு சீமையிலே. அப்ப பாரதிராஜா தான் கொடிகட்டி பறந்தார். அப்படியே நான் 20 படங்களுக்கு மேல் பண்ணினேன். ஆனால், பருத்திவீரன் படத்தில் தான் என் குரல் பிரபலமானது. என் குரலுக்கு என்ற அடையாளத்தை அதுவும் மணிக்குரல் என்ற பெயரை வாங்கித் தந்தது பருத்திவீரன் படம் தான். பருத்திவீரன் படம் தான் என்னை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இந்த குரலை வைத்து தான் எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது என்று கூறினார்.