சென்னை குன்றத்தூரில் குழந்தைகளைக் கொலை செய்த அபிராமிக்கு கடும் தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்த அபிராமி, வீட்டைவிட்டு தப்பினார். இந்த வழக்கை குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரித்து அபிராமி, அவரின் நண்பர் சுந்தரம் ஆகியோரை கைது செய்துள்ளார். தற்போது அபிராமியும் சுந்தரமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அபிராமிக்கு எதிராக வழக்கறிஞர் தமிழ்வேந்தன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தப் புகார் மனுவில் எனக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தவறான நட்பால் கொலைகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றன. குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டுமே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற குற்றங்கள், சமூக சீர்கேட்டுக்குக் காரணமாக உள்ளது.
சமீபத்தில் குன்றத்தூரில் அபிராமி என்ற பெண், தன்னுடைய இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளார். எனவே, இந்தக் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு போலீஸார் தடுக்க வேண்டும். எனவே, குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. கைதானவர்கள் சிறைக்குள் இருக்கும் நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.