Radio City 91.1 FM “Love Guru” இவர்தான்.! வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!

0
416
Love-guru

பண்பலை வானொலி நேயர்களின் காதல் அனுபவங்களுக்கும் அனுதாபங்களுக்கும் ஆலோசகரான `லவ் குரு’ ராஜவேலுவை, `அவளும் நானும்’ பற்றிப் பேசச் சொன்னோம்… அந்த அவள், அவரின் காதலிகளில் ஒருவராக இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பில். ஆனால் அன்பு, பாசம், மரியாதை எல்லாவற்றையும் தாண்டிய உணர்வு தாங்கிய உறவுக்குச் சொந்தக்காரராக அவரின் `அவள்’ நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

Rajavel-Nagarajan

“என் வாழ்க்கையில அம்மாவும் பாட்டியும்தான் மிக முக்கியமான பெண்கள். அப்புறம் வாழ்க்கையில வந்த தோழிகள், காதலிகளைத் தொடர்ந்து மனைவின்னு திரும்பிப் பார்த்தா ஒவ்வொரு முக்கியமான காலகட்டத்துல யும் பெண்கள் இருந்திருக்காங்க. நான் உடைஞ்சு விழக் காரணமா ஒரு பெண் இருந்தாங்கன்னா, ஒட்டவெச்சதும் ஒரு பெண்ணாத்தான் இருந்திருக்காங்க. என் வாழ்க்கையை வண்ணமயமாக்கினதுல நிறைய பெண்களின் பங்களிப்பு இருந்திருக்கு.

திருச்சியிலேயே உன் வாழ்க்கை முடங்கிடக் கூடாதுனு என்னைச் சென்னைக்குப் போகச் சொல்லி உந்தித் தள்ளினதும் ஒரு பெண்தான். `சென்னையில என்ன பண்ணப்போறேன்’னு தட்டுத்தடுமாறி நின்னபோது, `என்னாலயும் ஏதோ செய்ய முடியும்’னு உணர்த்தினதும் ஒரு பெண்தான். இந்த ஊரே வேணாம்னு நினைக்க வெச்சதும் பெண்தான். இப்படி என் சிந்தனைகளை உருக்குலைச்சது, ஒருமுகப்படுத்தி ஆக்கபூர்வமாக்கினதுனு எல்லாமே பெண்கள்தாம்.

Nagarajan

பெண்… ஆயிரம் பேய்களின் அழகான சங்கமம்’னு ஸ்கூல் நாள்களில் கவிதை எழுதியிருந்தேன். போகப் போகத்தான் `பெண்… ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம்’னு புரிஞ்சது. ஓர் ஆணின் உலகம் பெண்ணால் மட்டும்தான் முழுமையடை யும்னு உறுதியா நம்புறேன். அது யாராகவும் இருக்கலாம். வாழ்க்கையில நான் கற்றதும் பெற்றதும் பெண்களால்தான். பெண்களின் உலகமான `அவள் விகடன்’ மூலம் அதைச் சொல்றதுல ரொம்ப சந்தோஷப்படுறேன்.

ரேடியோ சிட்டி அலுவலகத்துக்குக் கீழே இ.மாலா மேடத்தின் நண்பரின் நிறுவனம் இருந்தது. அங்கே மாலா மேடம் அடிக்கடி வருவாங்க. புன்னகை, ஹாய், ஹலோ, வணக்கம்… இந்த அளவுக்குத்தான் அப்போ அவங்களுக்கும் எனக்குமான அறிமுகம். இயக்குநர் பாண்டிராஜும் மாலா மேடத்தின் கணவரும் ஒளிப்பதிவாளருமான பாலசுப்ரமணியெமும் சேர்ந்து நிறைய படங்கள்ல வொர்க் பண்ணியிருக்காங்க. நான் பாண்டிராஜ் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தேன். பாண்டிராஜ் சார் மூலமா பாலு சாரின் அறிமுகம் கிடைச்சது. பாலு சாருக்கு, என் நிகழ்ச்சி ஏற்கெனவே பரிச்சயம். இந்த நட்பு, மாலா மேடம்-பாலு சார் வீடு வரைக்கும் போகிற அளவுக்கு இன்னும் நெருக்கத்தைக் கூட்டியது. எப்போ வேணும்னாலும் அவங்க வீட்டுக்குப் போகலாம். மாலா மேடம்கிட்ட எந்தப் பிரச்னையைப் பற்றியும் மனம்விட்டுப் பேசலாம். ஓர் அம்மாவா, அக்காவா, தோழியா நல்ல ஆலோசனை சொல்வாங்க.

Love-Guru

2015-ம் வருஷம், சென்னையில மிகப்பெரிய ரெஸ்டாரன்ட் குரூப் லான்ச் ஆனது. அந்த லான்ச்சை என்னை செஞ்சு கொடுக்கச் சொன்னாங்க மாலா மேடம். அப்போ நான் ரேடியோவுல ஆர்.ஜே. அவ்வளவுதான். சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விளம்பரத் தயாரிப்பு வேலை வந்தப்போ, என்னைச் சொந்த கம்பெனி தொடங்கச் சொல்லி, தன்னம்பிக்கைக்கும் தைரியத்துக்குமான முதல் விதையைப் போட்டது மாலா மேடம்தான். நான் தயங்கி, `அதை வேற யாருக்காவது கொடுத்துடலாம்’னு சொன்னப்போ, `உங்களால முடியும், செய்யுங்க’னு தைரியம் கொடுத்தாங்க. அப்படித்தான் நான் என்னுடைய `துரோணா மீடியா’ கம்பெனியை ஆரம்பிச்சேன். ரேடியோ வேலை இல்லைன்னா அடுத்து என்னன்னு யோசிக்கத் தேவையில்லாத அளவுக்கு, எனக்கு ஒரு மாற்று ஏற்பாட்டுக்கான வழியைக் காட்டினாங்க.

அந்த பிசினஸ்ல லாபம் வந்தது. அதை மேடமுக்குக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டு எடுத்துட்டுப் போனேன். அவங்க அதை வாங்க மறுத்துட்டாங்க. ஆதரவற்ற குழந்தைகளுக்காக அவங்க நிறைய சேவைகள் பண்றாங்க. அந்தத் தொகையை அந்தச் சேவைகளுக்காகப் பயன்படுத்திக்கச் சொன்னேன். எனக்குத் தெரிஞ்சு அவங்க இதுவரைக்கும் தனக்குனு யார்கிட்டயும் எந்த உதவியும் கேட்டதில்லை. ஆனா, ஆதரவற்ற குழந்தைங்களுக்குனு வரும்போது தயங்காம உதவிகள் கேட்பாங்க. மிகப்பெரிய ஹீரோவுக்கு, 100 குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் கொடுக்கிறது பெருசா தெரியாது. அவங்களை அணுகி, உதவிகள் கேட்டு வாங்கிச் செய்றதுக்கு பெரிய மனசு வேணும். அது மாலா மேடத்துக்கு இருக்கு.

கடந்த சில வருஷங்கள்ல மேடம் எடுத்துச் செஞ்ச எல்லா புராஜெக்ட்டுலயும் எனக்கு ஓர் இடம் வெச்சிருப்பாங்க. கலர்ஸ் டி.வி-க்காக ஒரு புரோகிராம் பண்றதா இருந்தது. அதுக்காக என்கிட்டதான் முதல்ல கதை கேட்டாங்க. சில நடைமுறைச் சிக்கல்களால் அந்தக் கதையைப் பண்ண முடியலை. ஆனாலும், கலர்ஸ் டி.வி-யின் அஃபிஷியல் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டா எனக்கு வாய்ப்பு கிடைக்கவும் மாலா மேடம்தான் காரணம். கடந்த மூணு வருஷங்கள்ல என் வாழ்க்கையில நிகழ்ந்த அத்தனை முன்னேற்றம், வளர்ச்சியின் பின்னாலும் இருக்கிறவங்க மாலா மேடம்தான்’’ – அதுவரை ஒலித்த கம்பீரக் குரல் உடைகிறது ராஜவேலுவுக்கு. அடுத்து அவர் பகிரப்போகும் விஷயத்தின் ஆழம் தெரிகிறது அவரின் கண்களில்.