தோனியை சந்திக்க சென்ற சாய் சுதர்ஷன்... ஆனால் வந்த பதில் வேற லெவல்!
இந்தியாவின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷன், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத சில தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக சதம் அடித்த பிறகு மகிழ்ச்சியில் மகேந்திர சிங் தோனியை சந்திக்க சென்றபோது, தோனி தன்னை கலாய்த்து பேசிய சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

'நீ ஏற்கனவே நல்லா விளையாடுற... அப்புறம் எதுக்கு என்னைப் பார்க்க வந்த?'
யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாய் சுதர்ஷன், "ஒருமுறை நான் எம்.எஸ். தோனியை சந்திக்கச் சென்றேன். அப்போது அவர், 'நீ ஏன் என்னைப் பார்க்க வந்தாய்? நீ ஏற்கனவே சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறாயே' என்று சிரித்தபடியே கேட்டார். அது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக நான் சதம் அடித்த பிறகு நடந்தது. மகிழ்ச்சியில் அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே சென்றேன். ஆனால் அவர், 'இவ்வளவு நன்றாக விளையாடுகிறாய், பிறகு என்னிடம் பேச என்ன இருக்கிறது?' என்று நகைச்சுவையாக கூறினார். அந்த தருணம் இன்னும் என் நினைவில் இருக்கிறது" என்று தெரிவித்தார்.
விராட் கோலி, பும்ரா பாராட்டு... மறக்க முடியாத தருணம்
தனது கிரிக்கெட் பயணத்தில் மிகவும் பெருமையாக உணர்ந்த மற்றொரு தருணத்தையும் சாய் சுதர்ஷன் பகிர்ந்துள்ளார். "கடந்த ஆண்டு ஐபிஎல் விருது வழங்கும் விழாவில் ஜஸ்பிரித் பும்ரா என் தோளில் தட்டிக் கொடுத்து 'அருமையான சீசன்' என்று பாராட்டினார். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரிடம் இருந்து அந்த வார்த்தையை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பிறகு விராட் கோலி 'மீண்டும் ஒரு சிறப்பான சீசன்' என்று என்னிடம் கூறினார். இப்படிப்பட்ட பாராட்டுகள்தான் நான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றன" என்றார்.
இரண்டு சீசன்களில் ரன் மழை பொழிந்த சாய் சுதர்ஷன்
சாய் சுதர்ஷன் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் 759 ரன்களும், 2026 சீசனில் 722 ரன்களும் குவித்துள்ளார். இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் விளாசி, ஐபிஎல்லின் மிகவும் நம்பகமான இளம் பேட்ஸ்மேன்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
'ஒருநாள் சிஎஸ்கேவுக்காக விளையாட வேண்டும்'... சாய் சுதர்ஷனின் கனவு
சென்னையைச் சேர்ந்த வீரரான சாய் சுதர்ஷன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பது தனது நீண்டநாள் கனவு என்றும் தெரிவித்துள்ளார். "பள்ளி, கல்லூரிக்கு செல்லும்போது சிஎஸ்கே அணியின் பேருந்து எங்கள் வழியாக செல்லும். அந்த பேருந்தைப் பார்ப்பதே எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும். பல முறை அந்த பேருந்தின் பின்னால் நாங்களும் செல்வோம். அந்த நாட்களில் இருந்தே சிஎஸ்கே ஜெர்சி அணிந்து விளையாட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்" என்று அவர் கூறினார்.

குஜராத் அணியில் ஜொலிக்கும் சென்னை வீரர்
சென்னையைச் சேர்ந்தவராக இருந்தாலும், 2022 முதல் 2026 வரை நடைபெற்ற ஐந்து ஐபிஎல் சீசன்களிலும் சாய் சுதர்ஷன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவே விளையாடி வருகிறார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், எதிர்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.






