ரஜினிகாந்த் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் நாங்குநேரி பகுதியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது.இது தொடர்பாக சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நெட்டிசன்கள் என பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்
ஜாதி வன்கொடுமைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திருக்கிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன் கூறியிருந்தது, சமீப காலமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து ஜாதி வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவம் திடீரென்று நடந்த சம்பவம் கிடையாது. இது திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஆதிதிராவிடர் மக்கள் வாழும் வீடுகளில் புகுந்து சட்ட விரோத செயல்களெல்லாம் செய்துவிட்டு சுலபமாக வெளியே செல்லும் நிலை தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.
சாதி வன்கொடுமை குறித்து சொன்னது:
ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் பலர் தலித் அரசியல் பேசும் திரைப்படங்களை கொடுத்து இருக்கிறார்கள். இதுபோன்ற வன்கொடுமைகள் நடப்பதற்கு காரணம் என கண்டறிந்தவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் .இது போன்ற மூடர்கள் தான் அரசியல் தலைவராக தெரிகிறார்கள். அதேபோல் சில தினங்களுக்கு முன் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்து வணங்கி இருக்கிறார்.
ரஜினி செய்த செயல்:
பூனை குட்டி வெளியே வந்துவிட்டது. ஒருவேளை ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து தமிழகத்தின் முதலமைச்சராகி இருந்தால் யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆனதை போல தமிழகமாகி இருக்கும். இது எவ்வளவு பெரிய வேதனையான விஷயம். ரஜினிகாந்த் மீது தமிழ் மக்கள் எவ்வளவு பெரிய உயர்ந்த மரியாதையை வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர் தலைவர்களை சந்திப்பது, முதல்வரை சந்திப்பது பிரச்சினை அல்ல. அவர்களுடைய காலடியில் விழுந்து வணங்குவது என்ன அர்த்தம்? யோகி ஆதித்யநாத்தை நீங்கள் உயர்வாக மதிப்பது உங்கள் விருப்பம்.
ரஜினி குறித்து சொன்னது:
அது உங்களுக்குள் உள்ள உறவு. அதேபோல் தமிழக மக்கள் உங்களை எவ்வளவு உயர்வாக மதித்து இருக்கிறார்கள். ஆனால், அது எப்படிப்பட்ட உறவு என்பதை ஒரே நிகழ்வில் காட்டி விட்டீர்கள். இப்படிப்பட்ட நபர்களில் கையில் தான் தமிழகம் உள்ளது. இப்படிப்பட்ட நபர்கள் தான் தமிழகத்தில் கருத்து உருவாக்கும் இடத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட சக்திகளிடமிருந்து தமிழகத்தை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையும் பாதுகாக்க வேண்டும். மேலும், சனாதன சக்திகளை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது தான் நமது கடமையாக இருக்க வேண்டும்.
திருமாவளவன் வைத்த கோரிக்கை:
அதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றி இன்றியமையாத தேவையாக உள்ளது. தென் தமிழகத்தில் தொடரும் சாதிய கொலைகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி பகுதியை சாதி வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். படுகாயம் அடைந்த பள்ளி மாணவனின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்குவது மட்டும் இல்லாமல் அவர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற பல கோரிக்கைகளுடன் தமிழக அரசிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது என்று கூறி இருக்கிறார்.