மெர்சல் படத்தில் நடித்த தன் அனுபவத்தை பகிரும் ‘சரவணன் மீனாட்சி’ செந்தில்குமாரி !

0
3313
saravan-meenakshi-senthilkumari

பசங்க’ படத்தில் அன்பான அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார். தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். தற்போது, ‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய உருக்கமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்தவர். தன் மெர்சல் அனுபவங்களை நம்மிடையே பகிர்கிறார்.
செந்தில்குமாரி‘சரவணன் மீனாட்சி’ வாய்ப்பு வந்தபோது, சின்னத்திரையெல்லாம் எனக்கு செட்டாகாதுனு சொல்லிட்டேன். அவங்க விடாமல் தொடர்ந்து கேட்டுட்டே இருந்தாங்க. எனக்கு தனிப்பட்ட முறையில் அந்த சீரியல் பிடிக்கும் அதுனால சரி, பண்ணிப் பார்ப்போம்னு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தேன்.

சின்னத்திரையில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தாலும், சினிமாவை விட்டுறக் கூடாதுனு ரொம்பவே உறுதியா இருந்தேன். அப்போதான் ‘மெர்சல்‘ வாய்ப்பு வந்துச்சு.எனக்கு அந்தக் கதாபாத்திரம் ரொம்ப பிடிச்சுப்போய் ஓகே சொல்லிட்டேன். அந்தப் படத்தில், என் குழந்தை இறந்துடறதால், வருத்தப்படுற மாதிரி ஒரு காட்சி. அதில் நடிக்கறப்போ கிடுகிடுனு உடம்பெல்லாம் நடுங்கிருச்சு. ஏன்னா, எனக்கும் பசங்க இருக்காங்க. ஒரு தாயா அந்த வலியை என்னால் புரிஞ்சுக்க முடிஞ்சது. ரொம்பவே ஃபீல் பண்ணி நடிச்சேன். பத்து மாசம் சுமந்து பெற்ற குழந்தையைத் திடீர்னு இழக்கும்போது உண்டாகும் வலியை வார்த்தையால் சொல்ல முடியாது. அனுபவிக்கும்போதுதான் தெரியும்.

வயசானதுக்கு அப்புறம், நம்ம குழந்தை இருக்குன்னுதான் வாழ்வாங்க. அந்தக் குழந்தையே இல்லைன்னு ஆகிட்டால், யாருக்காக வாழணும். இந்தப் படத்தில் ஒரு அம்மாவா அந்த வலியை மனசால உணர்ந்து நடிச்சேன். என் நடிப்பைப் பார்த்த அட்லி, ‘இனிமே என் எல்லாப் படத்திலும் நீங்க இருக்கணும்னு’ சொன்னார். படம் ரிலீசானதிலிருந்து இப்போ வரைக்கும் தினமும் பலரும் போனில் பாராட்டறாங்க.
senthilkumari
அந்தப் படத்தில் பல காட்சிகள் நடிச்சேன். அதுல சில காட்சிகள்தான் படத்துல வந்தது. பல காட்சிகள் வரலை. அதையும் பார்த்திருந்தால், இன்னும் எமோஷனல் ஆகியிருப்பீங்க. அவ்வளவு நெகிழ்ச்சியா இருந்துச்சு. அந்தக் காட்சிகளில் நடிச்சுட்டு வீட்டுக்கு வந்ததும், என் பசங்களை அணைச்சு முத்தம் கொடுத்தேன். என் பசங்களுக்கு நான் படங்களில் நடிக்கிறதைப் புரிஞ்சுக்க தெரியாது. ‘அம்மா உங்களை டி.வியில் பார்க்கும்போது அழகா இருக்கீங்க’னு அன்பா சொல்வாங்க. அவங்கதான் என் உலகம். ‘மெர்சல்’ மாதிரி பேசப்படும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன். எந்தக் காட்சியாக இருந்தாலும், எனக்கு உண்மையா நடக்குற மாதிரி ஃபீல் பண்ணி நடிப்பேன்.” – என மகிழ்ச்சி ததும்ப சொல்கிறார் செந்தில்குமாரி.