தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். அவரது நடிப்புக்கும் நடனத்துக்கும் ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ படத்துக்குப் பிறகு, எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார் அல்லு அர்ஜுன்.
தொடர்ந்து அவர் நடித்த படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் கதைகள் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது திரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜுன் சொந்தமாக கேரவன் ஒன்றை வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியானது. பிரமாண்ட பொருள்செலவில் தயாரான அந்த கேரவனின் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அல்லு அர்ஜுன். மேலும், “ஒவ்வொரு முறையும் பிரமாண்ட பொருள்களை வாங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். மக்கள் கொடுத்த அளவில்லாத அன்பினால்தான் அவற்றையெல்லாம் என்னால் வாங்க முடிகிறது. அனைவருக்கும் நன்றி.
இதுதான் என் கேரவன் ‘ஃபால்கான்'” எனக் குறிப்பிட்டிருந்தார். ‘ஃபால்கான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கேரவனை 3.5 கோடிக்கு வாங்கி மும்பையில் உள்ள தொழுல்நுட்ப வல்லுநர்களிடம் கொடுத்து 3.5 கோடி ரூபாய்க்கு தனக்கு தகுந்தாற்போல் சொகுசாக வடிவமைத்துள்ளார் அல்லு அர்ஜுன்.