விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதிலும் புகழ் பற்றி சொல்லவா வேண்டும். இப்படி ஒரு நிலையில் புகழ் கடை திறப்பு விழாவிற்கு சென்ற கடைக்கே சீல் வைக்கப்பட்டுள்ளது.
நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தேர்தலுக்கு பின் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் தற்போது மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் வெளியில் சென்றால் கட்டாயமாக மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் புகழ் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு சென்று இருந்தார். புகழை கண்டதால் அங்கு கூடி இருந்த பலரும் அவருடன் செல்பி எடுத்தனர். அவர்களுக்கு எல்லாம் காரில் இருந்தபடி போஸ் கொடுதார் புகழ்.
கொரோனா பரவல் அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில் புகழை காண கூட்டம் கூடியதோடு அங்கே இருந்த பலரும் மாஸ்க் அணியாமலும் இருந்தனர். இதனை பார்த்த காவல் துறையினர் அங்கிருந்த கூட்டத்தை கலைக்க லேசான தடியடி நடத்தினர். அதே போல கட்டுப்பாடுகளை மீறியதாக புகழ் திறப்பு விழா செய்ய வந்த கடைக்கும் சீல் வைத்தனர்.