கனா படத்தினால் தான் கிரிக்கெட்டர் ஆனேன் என்று யுஏஇ கேப்டன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி இருந்த படம் கனா. இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு கனா படம் வெளியாகி இருந்தது.
கனா படம்:
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் சீன மொழியிலும் இப்படம் வெளியாகி இருந்தது.
யுஏஇ கேப்டன் தீர்த்தா சதீஸ்:
இந்த நிலையில் கனா படத்தினால் தான் கிரிக்கெட்டர் ஆனேன் என்று யுஏஇ கேப்டன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதாவது, யுஏஇ-ன் மகளிர் கிரிக்கெட் அணி அண்டர் 19-ன் கேப்டன் தீர்த்தா சதீஸ். ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணி, ஐசிசி அண்டர் 19-ன் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு தாய்லாந்து அணியை வீழ்த்தி தேர்வுபெற்றது. இந்த போட்டியில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணிக்கு வெற்றியை வாங்கித் தந்தவர் தீர்த்தா சதீஸ்.
தீர்த்தா சதீஸ் அளித்த பேட்டி:
இவர் தமிழகத்தில் பிறந்து துபாயில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது தொடர்பாக தீர்த்தா சதீஸ் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, முதலில் அமீரக பயிற்சியாளர் ஒருவர் என்னிடம் அண்டர் 19-ன் டீமில் என்னை சேரச்சொல்லி கேட்டார். அப்போது கிரிக்கெட் மீது எனக்கு ஆர்வம் இல்லை. அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகு தான் கனா படம் வெளியானது.
வாழ்த்து சொல்லிய சிவகார்த்திகேயன்:
அந்த படத்தை பார்த்த பிறகு நான் ஏன் முயற்சி செய்யக் கூடாது? என்ற எண்ணத்துடன் முயற்சி செய்தேன். இப்போது அண்டர் 19-ன் டீமிற்கு கேப்டனாக உள்ளேன் என்று கூறி இருந்தார். இப்படி இவர் அளித்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், தீர்த்தா சதீஸ் அளித்த பேட்டியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இது கனா படத்திற்கு கிடைத்த மற்றுமொரு அங்கிகாரம் என்று குறிப்பிட்டு தீர்த்தா சதீஸிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.