முதல் படத்திலேயே வைரமுத்துவுடன் பணிபுரியும் வாய்ப்பு – கவிபேரரசையே கவர்ந்த திருநல்வேலி இசையமைப்பாளர்.

0
82
nawfal raja
- Advertisement -

திறமையானவர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கான வாய்ப்பு தேடி வரும் என்பதை பிற மொழித் திரைப்படங்களில் பணியாற்றும் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் நிரூபித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் இருந்து புறப்பட்டு தற்போது தெலுங்கு சினிமாவை கலக்கிக் கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் நவ்பல் ராஜா.திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட இசையமைப்பாளர் நவ்பல் ராஜா, சிறுவயது முதலே இசை மீது தீரா காதல் கொண்டதால், தனது பள்ளி பருவத்திலேயே பல இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார்.

-விளம்பரம்-

மேலும், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் இசைத்துறை தான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்து அதில் பயணித்தவர் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக பயணித்து வருகிறார். நவீன் சந்திரா, சாய்குமார் ஆகியோரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அர்த சதாப்தம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் நவ்பல் ராஜா.

- Advertisement -

முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார். அதை தொடர்ந்து, ஜெகபதிபாபு, மம்தா மோகன் தாஸ், விமலா ராமன் ஆகியோர் நடித்த ‘ருத்ரங்கி’ மற்றும் ‘நரகாசூரா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். இந்த இரண்டு படங்களின் பாடல்கள் மட்டும் இன்றி பின்னணி இசையும் அனைவராலும் பாராட்டு பெற்றது. தொடர்ந்து மூன்று வெற்றி படங்களுக்கு இசையமைத்த நவ்பல் ராஜா, தெலுங்கு சினிமாவின் வெற்றி இசையமைப்பாளராக உருவெடுத்தார்.

தற்போது ஐந்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் சில பட வாய்ப்புகளோடு தெலுங்கு சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருபவர் தற்போது தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். ‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் ‘ஆண் மகன்’ படம் மூலம் நவ்பல் ராஜா தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் கந்தசாமி இயக்கும் இப்படத்தில் பிரபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுவது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

முதல் படத்திலேயே வைரமுத்து பாடல்களுக்கு நவ்பல் ராஜா இசையமைப்பது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், அதை விட ஆச்சரியம் என்னவென்றால், இசையமைப்பாளர் நவ்பல் ராஜா புரோகிராமராக இருந்த போதே தனது பணியின் மூலம் கவிப்பேரரசு வைரமுத்துவை கவர்ந்தது தான். நவ்பல் ராஜா புரோகிராமராக இருந்த போது இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார், தாஜ்நூர் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு புரோகிராமிங் செய்துள்ளார்.

அப்போது அவர் செய்த புரோகிராமிங்கை கேட்ட வைரமுத்து, அவர் பற்றி விசாரித்ததோடு, அவரைத் தேடிப்பிடித்து, 100 இசையமைப்பாளர்கள் கொண்டு தான் உருவாக்கிய ‘நாட்படு தேறல்’ பாடல் தொகுப்பில் பணியாற்ற வைத்தார். அன்று முதல் கவிப்பேரரசுவின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான நவ்பல் ராஜா, தனது முதல் தமிழ்ப் படத்திற்கு வைரமுத்துவை பாடல்கள் எழுத அணுகிய போது அவர் உடனே சம்மதம் தெரிவித்து நான்கு சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிக்கொடுத்திருக்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத சம்மதித்ததே பெரிய விசயமாக பார்க்கும் போது, சம்பளம் தொடர்பாக எதுவும் பேசாமலேயே பாடல்களை எழுதி கொடுத்திருப்பது, நவ்பல் ராஜா திறமை மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. மெலொடி மற்றும் குத்து பாடல்களோடு முழுக்க முழுக்க கமர்ஷியல் பாணியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ள ‘ஆண் மகன்’ பட பாடல்களை சித் ஸ்ரீராம், சங்கர் மஹாதேவன் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பாட இருப்பதோடு, டி.ராஜேந்தரும் ஒரு பாடல் பாட இருக்கிறார்.

மேலும், நடிகர் சிலம்பரசனும் இந்த படத்தில் ஒரு பாட்டு பாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதாம். சூப்பர் ஹிட் பாடல்களோடு பின்னணி இசையிலும் கவனம் ஈருக்கும் விதத்தில் உருவாகி வரும் ‘ஆண் மகன்’ திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவைப் போல் தமிழ் சினிமாவிலும் இசையமைப்பாளர் நவ்பல் ராஜா, முன்னணி இசையமைப்பாளராக பயணிப்பது உறுதி. மெலொடி பாடல்கள் தனது பலம் என்று சொல்லும் இசையமைப்பாளர் நவ்பல் ராஜா, ஒரே நேரத்தில் 25 இசைக்கருவிகளை வாசிக்க கூடிய திறன் படைத்தவர். இத்தகைய சாதனையை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்னிலையில் நிகழ்த்தி, அவரது கையில் விருதும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement