பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பிரபல சீரியல் நடிகை என்ட்ரி கொடுத்திருக்கும் ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி இருந்தது. கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் நிறைவடையும் முன்னரே இரண்டாம் சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தான் இரண்டாவது பாகத்தின் டைட்டில். இதற்கு முன்பு அண்ணன் தம்பிகள் கதையை மையமாக வைத்து எடுத்திருந்தார்கள். தற்போது இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து கதையை எடுக்கிறார்கள். மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும், இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இந்த சீரியலில் புது முகங்கள் சில பேர் இருந்தாலும், பழைய முகங்களும் இருக்கிறார்கள். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். இவர் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக திருமணம் நடந்து விடுகிறது. ஆனால், மூத்த மகன் சரவணனுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் வீட்டில் எல்லோருமே அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
சீரியலில் என்ட்ரியாகும் நடிகை:
அதோடு முன்பை விட கடந்த சில வாரங்களாகவே பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பிரபல நடிகை ஒருவர் எண்ட்ரியாகி இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர் வேற யாரும் இல்லைங்க, சீரியல் நடிகை சரண்யா தான். அனேகமாக, இவர் சரவணனுக்கு ஜோடியாக தான் வருவார் என்று கூறப்படுகிறது. தற்போது இவருக்கான புரோமோ தான் வெளியாகி இருக்கிறது.
சரண்யா குறித்த தகவல்:
அது மட்டும் இல்லாமல் இவர் மறைந்த நடிகை, வி ஜே சித்ராவின் நெருங்கிய தோழியும் ஆவார். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால், அந்த தொலைக்காட்சியில் இரண்டு மாதங்கள் மட்டுமே இருந்தார். பின்னர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார். மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து உள்ளார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார்.
சரண்யா நடித்த சீரியல்கள்:
சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து இருந்தார். பின் சன் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட ரன் தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் ஆயுத எழுத்து, வைதேகி காத்திருந்தாள் போன்ற சீரியல்களில் நடித்து இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்கிறார். இனிமேல் சீரியல் ஆட்டம் சூடு பிடிக்கும் என்றெல்லாம் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.