திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் உள்ள அம்மன் சன்னதி முன்பு நடிகர் ரஜினிகாந்த் எடுத்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ரஜினி திரைப்பயணம்:
இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
அண்ணாமலையார் கோவிலில் ரஜினி:
கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கும் மேலாக இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும், இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று சுவாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். பின் மூலவர் மற்றும் அம்மன் சன்னதியில் நின்று வழிபாடு செய்திருக்கிறார். அப்போது கோவிலில் ரஜினிகாந்த் அவர்கள் அம்மன் சன்னதியில் நின்று சாமி கும்பிட்டபோது எடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.
சர்சைக்குள்ளான ரஜினி புகைப்படம்:
தற்போது இந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவை சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. அதாவது, மூலவர் மற்றும் அம்மன் கருவறை முன்பு நின்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி இல்லை என்பது விதி. இந்த விதியை ரஜினிகாந்த் மீறி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இது குறித்து இந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இது தொடர்பாக மாவட்ட பொது செயலாளர் அருண் குமார் கூறியிருப்பது, கடவுள் முன்பு அனைவரும் சமமே. யாராக இருந்தாலும் கருவறை முன்பு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. கருவறை முன்பு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இந்து சமய அறநிலைத்துறை மண்டலம் கூறியது:
புகைப்படம் எடுத்தவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து அண்ணாமலையார் கோவில் தரப்பில் கூறப்பட்டது, திருப்பதி ஏழுமலையான் கோவிலை போன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தை அடுத்து செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை. அம்மன் சன்னதியில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்த போது யாரோ ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார். மேலும், இந்து சமய அறநிலைத்துறை மண்டலம் சார்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.